திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அவர், மூலவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் சண்முகருக்கு நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்து கொண்டு மனமுருகி வழிபட்டார். தரிசனத்திற்குப் பிறகு தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், “புண்ணிய தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழிபாடு செய்ததை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தத் திருக்கோவிலின் தெய்வீக ஆற்றலை உணர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவருடன் பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.


