தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி அருகே சாக்கடைக் கழிவுகள் கொட்டப்படுவதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் சிவந்தாகுளம் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அள்ளப்படும் சாக்கடைக் கழிவுகளை இப்பள்ளியின் அருகே மற்றும் சாலையின் நடுவே கொட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விசிக மண்டல துணைச் செயலாளர் அர்ஜுன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணி என்ற பெயரில், நகரின் ஒட்டுமொத்த சாக்கடைக் கழிவுகளையும் பள்ளி வளாகத்தின் அருகிலேயே கொட்டி வருகிறது. இதனால் ஏற்படும் கடும் துர்நாற்றத்தால் மாணவர்கள் நிம்மதியாக உணவு உட்கொள்ளவோ, வகுப்பறையில் அமர்ந்து படிக்கவோ முடியாமல் அவதிப்படுகின்றனர்.”
இது தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்பாகம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து டிராக்டர்கள் மூலம் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆட்டோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, “பள்ளி அருகே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்; தவறினால் 500-க்கும் மேற்பட்டோரைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர்.


