தமிழகத்தில் தற்பொழுது அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள்கள் வாங்கிட கைரேகை பதிவு செய்யும் நிலை உள்ளது. பல ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்கின்ற மிஷின் சரியாக வேலை செய்யாததால் ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பி செல்கின்றனர். மீண்டும் ரேசன் கடைக்கு வந்தால் கைரேகை பதிவாவதில்லை. இதனால் ரேஷன் பொருள்கள் வாங்கிட கைரேகை பதிவு செய்ய பொதுமக்கள் தினசரி ரேஷன் கடைகளுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். மேலும் ஏழை எளிய மக்களுக்காக தமிழக அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் நிலையில் கைரேகை பதிவு முறை சரியாக பதிவாகததால் ஏழை எளிய மக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தினசரி ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காத்துக்கிடக்கும் பரிதாப நிலை உள்ளது. எனவே ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறையை ரத்து செய்யக்கோரி தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற முன்னாள் கவுன்சிலர் மகாராஜன் கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளார். அம்மனுவில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சாத்தான்குளம் தாலுகாவில் 73 ரேஷன் கடைகள் உள்ளன. சாத்தான்குளம் பேரூராட்சியில் மட்டும் 7 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஒழுங்கு முறையாக மொத்தமாக பொருட்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்களை வாங்கிட தாலுகா பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் மற்றும் பெண்களும் ரேஷன் கடைகளில் காத்திருக்கின்றனர். ஆனால் கைரேகை பதிவு சரியாக பதிவாகாததால் இவர்களுக்கு பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்ற நிலைதான் உள்ளது. இவர்கள் இப்படி தினசரி ரேஷன் கடைகளுக்கு சென்றே காத்துக்கிடக்கும் நிலைமை உள்ளது. கைரேகை பதிவு முறை சரியாக இல்லாததால் பொருட்கள் வழங்க முடியாது என்று கடையில் ஊழியர்கள் கூறிவிடுகிறார்கள். இதனால் பெரிய ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் ஏழை எளிய மக்கள் மறுநாள் ரேஷன் கடைக்கு வந்தாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. எனவே தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் முறையை உடனடியாக ரத்து செய்து ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் மொத்த பொருட்களும் ஒரே நாளில் கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து சாத்தான்குளம் நகர மதிமுக சார்பிலும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.


