நான் எழுதி சுவடு பதிப்பகம் வெளியிட்ட தீதும் நன்றே நாவலை பாராட்டி தம்பி நெருப்பு விழிகள் ச. சக்தி வேலாயுதம் எழுதிய விமர்சனத்தினை கீழே குறிப்பிட்டு உள்ளேன். படித்து கருத்தை தெரிவியுங்கள் நண்ப்ர்களே. விமர்சனம் எழுதிய தம்பிக்கு மிக்க நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களின் “தீதும் நன்றே” நாவல்-
அறிமுகம்
சுவடு பதிப்பக வெளியீடு
18 அத்தியாயங்கள்
280 பக்கங்கள்
விலை 330/-
தன் எளிய எழுத்துக்களை மண் மணம் மாறாமல் மகத்துவமாய் நமக்கு தந்துள்ளார் நாவலாசிரியர்.
தீநுண்மிக் கால நிகழ்வுகளை நம் வாழ்வை படம் பிடித்து காட்டிய நாவல் தீதும் நன்றே.
இந்த நாவலில் பல உட்கதைகள்..இல்லை இல்லை பல உண்மைகள். நெல்லையின் பேச்சு வழக்குகள், நில அமைப்புகள், மும்பை என நாவல் தன் சிறகுகளை விரிக்கிறது.
தீநுண்மி கால வாழ்வியலையும், முடக்கங்களையும், பல்வேறு காலகட்டத்தில் நடந்த வாழ்வனுபவங்களை முடிச்சு போட்டு
கதையை நகர்த்துகிறார் நாவலாசிரியர். முத்துக்கிளி நாயகியாக வலம் வந்தாலும் கதை போகிற போக்கில்
அவர் நம்மை அன்பால் கட்டி போடுகிறார்.
போகிற போக்கில் சில வரலாற்றையும்,நம் வாழ்க்கை முறையை ஒட்டி அமைந்த நிகழ்வுகளை எல்லாம் நம் கண் முன்னே விரிக்கிறார். ஆம் விவரிக்கிறார்.
கதையின் நாயகியான
தீநுண்மி காலத்தில்
முத்துக்கிளி கடத்தப்படுவதில் தொடங்கி மீட்கப்பட்டு மும்பையில் இருந்து நெல்லைக்கு காரில் அனுப்பி வைக்கப்படும் பாங்கில்
அவர் படும் சோதனைகளை கேள்விக்களை நூலாசிரியர் புனைவோடு கலந்து சொல்லி இருப்பது இந்த நாவலுக்கான பெரும்பலம்.
பரபரப்பான மும்பை தாராவி எனத் தொடங்கும் அத்தியாயத்தில்
தீ நுண்மிக்காலத்தில்
முத்துக் கிளியின் வேதனை மட்டுமல்ல அங்குள்ள மொத்த மனிதர்களின் வேதனையும் படம்பிடித்து காட்டுகிறார்.
கொரோனாவில் இருந்து தப்பித்த குடும்பம் என்ற அத்தியாயத்தில்
உதவிக்காக வந்த டிரைவர்
சந்திரன் படும் பாட்டை நமக்குச் சொல்கிறார்.
மேலும் நம்ம நாட்டுக்கு பிரியாணி வந்த வரலாறு என்ற அத்தியாயம் நம் வாசிப்பு நாவின் ஆசையைத் தூண்டிவிடுகிறது.
திருநெல்வேலியின் சுலோச்சன முதலியார் பாலம் தொடங்கி கன்னி தெய்வ வழிபாடு வரை சொல்லப்பட்ட செய்திகளில் நம் மண்ணின் மரபுகளை மனிதர்களை படம் பிடித்து காட்டுகிறார்.
கதை போகிற போக்கில் திருநெல்வேலியின் வரைபடங்களை
சொல்லிச் செல்வதாக கதாபாத்திரங்களை அமைத்து இருப்பது கூடுதல் சிறப்பு. கதாபாத்திரங்கள் வரைபடங்களின் பகுதிகளில் நின்று பேசுவது போலவும், அவற்றோடு பயணிப்பது போலவும் அமைத்திருக்கிறார் நாவலாசிரியர்.
முத்துக் கிளியின் மோகத்தில் சந்திரன் என்ற அத்தியாயம் நாவலின் சுவாரசியமான அத்தியாயம்.சாதிக்குள்ளேயும் ஒரு சாதி அத்தியாயம் நம் சமூகத்திற்கான மிக நல்ல கேள்வி.
திருநெல்வேலியின் பாரம்பரியமான கணியான் கூத்தை பற்றிய செய்து கொண்ட அத்தியாயம் கணியான் கூத்திற்கான அணிகலன் என்றே சொல்வேன்.
நிறைவான அத்தியாயமான தேடிவந்த மாப்பிள்ளையில் சந்திரனின் மனதை அன்பை நாவலின் மூலம் நிலைநாட்டுகிறார்.
நாவலை படித்து முடிக்கும் போது
மனதில் ஒரு சோகம் ஓடுகிறது என்பது மட்டும் உண்மை.
நாவலாசிரியர் அன்பு அண்ணன் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் இன்னும் இன்னும் இது போன்ற படைப்புகளை இந்த தமிழ் சமூகத்திற்கு தர வேண்டும். நாவல் உலகில் தாங்கள் சிறப்பிடம் பெற வேண்டும்.
வாழ்த்தி மகிழும்
ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்
நாவல் தேவைக்கு
திரு. முத்தாலங்குறிச்சி காமராசு / சுவடு பதிப்பகம்
8760970002.