ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் அமைக்க நிதி ஓதுக்கீடு செய்யாமல் பணிகள் முடங்கி கிடப்பதாக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “சுமார் 2500 வருடம் பழமையான கீழடியில் அறிக்கை பிரச்சனையை தற்போது மிகப்பெரிய அளவில் ஊடகங்கள் காட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் சுமார் 5000 வருடம் பழமையான , இந்தியாவிலேயே முதல் முதலில் சைட் மியூசியம் அமைந்த ஆதிச்சநல்லூர் நிலமையோ மிகவும் கவலைகிடமாக உள்ளது. இதை யாருமே கண்டு கொள்ள வில்லை.
எனவே இங்கு உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பட்ஜெட்டில் நிதி அறிவித்தார். தொடர்ந்து அவர்கள் அடிக்கல் நாட்டிய உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கிடப்பில் கிடக்கிறது. கூடுதல் சைட் மியூசியம் அமைக்க தமிழரான டாக்டர் அருண்ராஜ் தலைமையில் 2023 ல் அகழாய்வு செய்யப்பட்டது. அவர் பணி மாறுதல் அடைந்த பிறகு இந்த மியூசியத்தினை யாரும் கண்டு கொள்ளவில்லை.
அவருடன் பணியாற்றிய டாக்டர் யதீஸ்குமார் தமிழக தொல்லியல் துறைக்கு வந்து விட்டார். இப்போது ஆதிச்சநல்லூரை கட்டிகாக்க யாருமே இல்லை. அனைவரும் ஏனோ தானே என்று இருக்கிறார்கள். இங்கே வரும் அதிகாரிகள் ஏனோ தானே என்று வேலை செய்கிறார்கள். தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கு ஒப்புக்கு வந்து விட்டு செல்கிறார்கள். ஆனால் ஒரு துரும்பை எடுத்துக் கூட போடுவது இல்லை.
தற்போது சி சைட்டியில் அகழாய்வு செய்து சைட்மியூயம் அமைக்க தற்காலிக கூரைப்போடப்பட்ட இடங்கள் எல்லாம் பழுதாகி விட்டது. இதனால் நேற்று (29.05.2025) பெய்த மழையில் தண்ணீர் உள்ளே வந்து விட்டது. காற்றில் கூரை பறக்கிறது. தோண்டிய இடங்களை தார்பாய் போட்டு முடியுள்ளார்கள். தண்ணீர் உள்ளே வந்துவிடக்கூடாது என மணல் மூட்டை வைத்து அடைத்துள்ளார்கள். ஒரு மியூசியம் அமைக்க இந்த இடத்தினை பல லட்சம் செலவு செய்து அகழாய்வு செய்து பொருள்களை எடுத்து விட்டார்கள்.
உள்ளது உள்ளபடியே சைட் மியூசியம் அமைக்க பணி ஓதுக்கீடு செய்யாத காரணத்தினால் பல லட்சம் மத்திய தொல்லியல் துறை பணம் வீணடிக்கப்பட்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தமிழர்களின் தொன்மை அழிந்து விடும் அவல நிலையில் உள்ளது. தமிழரான டாக்டர் அருண்ராஜ் திருச்சி மண்டல இயக்குனராக இருக்கும் வ்ரை இவ்விடத்தில் பணி வேகமாக நடந்தது. தற்போது வடநாட்டு அதிகாரிகள்பணியில் இருந்தும் இதைகண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு எங்கே தமிழரின் பெருமை தெரியவேண்டும்.
எத்தனையோ தமிழர்கள் மத்திய தொல்லியல் துறையில் உள்ளனர். ஆதிச்சநல்லூர் மீது பற்று கொண்ட எத்தனையோ அதிகாரிகள் உள்ளனர். அவர்களை திருச்சி மண்டல இயக்குனராக நியமித்து ஆதிச்சநல்லூருக்கு பணம் ஓதுக்கீடு செய்து, தற்போது சி சைட்டில் சைட் மியூசியம் அமைத்து அதன் மேலே 7 மாடி கட்டிடம் கட்டி உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தினையும் அமைக்க வேண்டும்.
இதை மத்திய தொல்லியல் அதிகாரிகள் கண்ணில் படும் வரை சேர் செய்யவும். 2004ல் அகழாய்வு செய்த அறிக்கையை 17 வருடத்துக்கு பிறகு மதுரை உயர்நீதி மன்றத்தில் போராடித்தான் பெற்றோம். மீண்டும் மீண்டும் உயர்நீதி மன்ற கதவைத்தான் தட்டவேண்டுமா?. தமிழர்களின் பெருமையை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? ஆதிச்சநல்லூர் மியூசியம் பணி துவங்குமா?” என்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வேதனை தெரிவித்துள்ளார்.


