தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சீர்மரபின மக்கள் சமூக, பொருளாதார கல்வி நிலைகளில் மேம்பாடு அடைவதற்காக சிர்மரபினர் நல வாரியம் அமைக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்பவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ஓய்வூதியம், கண் கண்ணாடி செலவுத்தொகை, மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து ஈட்டுறுதித் தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்nதாகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தகுதிகள் : 18 வயது நிறைவடைந்த, 60 வயது நிறைவு பெறாத சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டும் உறுப்பினராக பதிவு செய்ய இயலும். அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாயக் கூலி மற்றும் உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர் இந் நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கு தகுதியுடையவராவர்.
அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரிந்து அந்நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பெறும் சீர்மரபினர் இத்திட்டங்களில் பயன்பெற இயலாது.இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் மட்டுமே நலத்திட்ட உதவிகள் பெற இயலும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: சீர்மரபினர் என்பதற்கான ஆதாரமாக சாதிச்சான்று. வேலையில் இருப்பவர் என்பதற்கான சான்று, தொழிலாளரை வேலைக்கு அமர்த்தியவர்ஃ பதிவு பெற்ற தொழிற்சங்கத்தின் தலைவர் அல்லது பொதுச்செயலர் அல்லது அவர்களால் அதிகாரமளிக்கப்பட்ட தொழிற்சங்க அலுவலரிடம்/தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் அல்லது தொழிற்சாலைகள் துறையின் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளரின் சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தல் வேண்டும்.
இந்நல வாரியத்தில் உறுப்பினாக பதிவு பெற தகுதியுடைய சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர் என்பதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களைப் பெற்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
பதிவு பெற்றுள்ள உறுப்பினர்கள் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதுப்பிக்கத் தவறியவர்கள் பின்னர் புதுப்பித்துக் கொள்ளும்போது இடைப்பட்ட காலத்தில் எவ்வித நலத்திட்ட உதவிகளையும் பெற இயலாது. தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


