முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி வரும் விவகாரம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலுக்குத் தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வழக்கம்போல் கோவில் வளாகத்தை ஒட்டியுள்ள கடலில் புனித நீராடிவிட்டுச் சாமி தரிசனம் செய்வது காலங்காலமாக நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் திருச்செந்தூர் கடற்கரை ஓரங்களில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கி வருகின்றன. இதன் காரணமாகக் கடலில் புனித நீராடும் பக்தர்களின் உடலில் இந்த ஜெல்லி மீன்கள் படும்போது, அதிலிருந்து வெளிப்படும் ஒருவித சுரப்பு காரணமாக உடலில் கடுமையான ஊறல், அரிப்பு மற்றும் தீக்காயங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் கடலில் இறங்கி நீராடும் பல பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கடற்கரையில் ஒதுங்கியுள்ள ஜெல்லி மீன்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காகத் தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, திருச்செந்தூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தண்ட ராமன் ஆகியோர் நேற்று திருச்செந்தூர் கோவில் கடற்கரைக்கு நேரில் வந்தனர்.
அங்கு அவர்கள் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன் ஒன்றைப் பிடித்து அதன் தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த நச்சுத்தன்மை வாய்ந்த மீன்களிடம் இருந்து பக்தர்களை எப்படிப் பாதுகாப்பது, ஜெல்லி மீன் கடித்தால் பக்தர்களுக்கு உடனடியாக எத்தகைய முதலுதவி சிகிச்சைகளை அளிப்பது என்பது குறித்துப் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து தீவிரமாக ஆலோசித்தனர்.
இந்த ஆய்வு குறித்து மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி தெரிவிக்கையில், “ஜெல்லி மீன்களால் பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இன்று (புதன்கிழமை) தூத்துக்குடியில் உள்ள கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலம் திருச்செந்தூர் கோவில் கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஜெல்லி மீன்களைக் கையாளுவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து இப்பயிற்சியில் விவரிக்கப்படும்” என்று கூறினார்.
இந்த ஆய்வின் காரணமாகத் திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.


