தூத்துக்குடி அருகே பைக் மீது தண்ணீர் லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். அவரது மனைவி, 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அடுத்துள்ள சவேரியார்புரம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அகிலன் மகன் அன்புசெல்வம் (34). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வேளாங்கண்ணி. இந்த தம்பதியருக்கு வியாகுல செல்வம் (7) என்ற மகனும் சரண்யா(4) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இன்று காலையில் மோட்டார் பைக்கில் சவேரியார்புரத்தில் இருந்து ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, பைக்கில் அன்புசெல்வம், அவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் முக்காணி புதுமனை நாடார் தெருவுக்கு திரும்பும் இடத்தில் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது இவருக்கு பின்னால் தூத்துக்குடி நோக்கி சென்ற தண்ணீர் டேங்கர் லாரி திடீரென்று பைக் மீது மோதியது. இதில் அன்புசெல்வம் லாரியின் டயருக்குள் சிக்கி உடல் நசுங்கி அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.
சரண்யா, வியாகுல செல்வம், வேளாங்கண்ணி ஆகியோர் படுகாயமடைந்தனர். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் அந்த 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துகுறித்து அறிந்த ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்புச்செல்வத்தின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தண்ணீர் டேங்கர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


