கடந்த 2020 மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் கடந்த வரும் ஆதிச்சநல்லூர் பகுதியில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக இடத்தினை தேர்வு செய்யும் பணியை தொடங்கினர். இதில் முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகளை கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கினர். இந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அதே இடத்தில் கண்ணாடிப் பேழைகள் மூலம் மூடப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அருங்காட்சியகம் அமைத்து, இதற்கு முன்பு மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு சென்னையில் உள்ள பொருட்கள், மற்றும் வெளிநாடுகளில் உள்ள பொருட்களை மீட்டு இந்த அருங்காட்சியகத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 17 கோடி ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட டெல்லி தொல்லியல் துறை இயக்குனர் அஜய் யாதவ், இணை இயக்குனர் சஞ்சை குமார் மஞ்சில், மத்திய தொல்லியல்துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் ஆகியோர் பார்வையிட வருகை தந்தனர். அவருடன் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் உடன் வந்தார்.
அவர்கள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள் நடந்து வரும் 4 இடங்களையும் பார்வையிட்டனர். மேலும் ஆதிச்சநல்லூரில் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளையும் பார்வையிட்டு ஆய்வாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வுகள் குறித்து அறிவுறுத்தினர்.
அதன்பின்னர் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு பணி நடைபெற்று வருகிறது. ஏ, பி என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் மூன்று காலகட்டங்களை உள்ளடக்கிய 52 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. அகழாய்வு பணி இடத்தில் உள்ளது உள்ளபடி என்ற அடிப்படையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆய்வாளர்கள் எத்தீஸ்குமார், முத்துகுமார், ராகவேந்திரர், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.