தூத்துக்குடியில் மாவட்ட மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்தலைமையில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 410 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டம், தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 23 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, தாப்பாத்தி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 02 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பாக 03 பயனாளிகளுக்கு தலா ரூ.4,720/- என மொத்தம் ரூ.14,160/- மதிப்பில் விலையில்லா தேய்ப்பு பெட்டிகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பாக வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


