தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ‘தூய்மை விழிப்புணர்வு முகாம்” நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியையொட்டி தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி, வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ/ மாணவியர்களிடையே ‘சுற்றுலாவும், அமைதியும்” என்ற தலைப்பின் கீழ் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி-வினா போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு வ.உ.சிதம்பரனார் கல்லூரி கலையரங்கில் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் முனைவர்.க.சசிகலா மற்றும் தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் இரா.சீதாராமன் ஆகியோர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள். இந்நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் இரா.சீதாராமன் சிறப்புரை ஆற்றினார்கள். வ.உ.சிதம்பரனார் கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் .க.சசிகலா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் வரலாற்றுத்துறை இணை மற்றும் உதவிப் பேராசிரியர்கள், வரலாற்றுத்துறை மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக்கோட்டையில் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘தூய்மை விழிப்புணர்வு முகாம்” நடத்தப்பட்டது. இம்முகாமில், தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கோட்டை வளாகத்தில் தூய்மைப் பணியினை மேற்கொண்டு, மரக்கன்றுகள் நட்டனர். இதில், தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் இரா.சீதாராமன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


