தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 4வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளில் செப்.23ம் தேதி முதல் 27ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பரிவில்லிக்கோட்டை கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் வெங்கிடசாமி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பெல்சி,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எட்வின் ஜெபராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பழனிச்சாமி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தினை ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் செய்தார். கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், கிராம வள பயிற்றுநர்கள் பேச்சியம்மாள்,நாகேஸ்வரி,கலா முத்துச்செல்வி, செல்வராணி,சொக்கல ஈஸ்வரி,பணித்தள பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணித்தள பொறுப்பாளர் ஜெப ராணி நன்றி கூறினார்.இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் பசுவந்தனை, கீழக்கோட்டை உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


