தினமலர் சீனிவாச சாமி, பஞ்சாயத்து பற்றிய விவரம் சேகரிக்க பஞ்சாயத்து எழுத்தர் குமரேசனை போனில் அழைத்தார். நாங்கள் எதிர்பார்க்காத விதமாக அவர் கோவில் அருகே தான் நின்று கொண்டிருந்தார். நாங்கள் கோயிலுக்குள் வருகிறோம் என்றவுடன் ஓடோடி வந்து எங்களை வரவேற்றார். என்னை நன்றாக தெரியவும். எப்போது நமது ஊர் செய்தியை சேகரிக்க வருவார் என அவரும் பஞ்சாயத்து தலைவரும் காத்துக்கொண்டிருந்தாக கூறினார்.
“தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் குடும்பத்துடன் கோயிலுக்கு வருகிறார். ஆகவே அவரை எதிர்ப்பார்த்து காத்து நிற்கிறோம்”. என்றார்.
அவர் குடும்பத்தினை வரவேற்று வேண்டிய உதவிகளை செய்யுங்கள். நாங்கள் அதற்குள் கோயிலை ஒரு சுற்று சுற்றி வருகிறோம் என்று கூறிவிட்டு நாங்கள் கோயிலுக்கு உள்ளே சென்றோம்.
சீனிவாச சாமி எங்களிடம் கோயில் பற்றிய வரலாற்றை கூறிக்கொண்டே நடந்தார்.
அதற்குள் பஞ்சாயத்து தலைவர் சேர்ம துரை என்னோடு போனில் தொடர்பு கொண்டார். எனது மருமகன் தங்கபெருமா-ளுக்கு அவர் நண்பர். இவரும் தங்கபெருமாள் பணிபுரிந்த கேஸ் கம்பேனியில் வைத்து பழக்கமானர்கள் என்றும், அந்த சமயத்தில் என்னை சந்தித்து இருப்பதாகவும் கூறினார். எனவே நான் ஊருக்கு வந்திருக்கிறேன் என்றவுடன் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். அவர் எங்களோடு துணைத்தலைவர் குமரேசனை தகவல் கூற அனுப்பி வைத்தார்.
பஞ்சாயத்து மூலமாக கிராம வளர்ச்சித் திட்டம் 2022 முதல் 2023 வரை என்ற துண்டு பிரசுரம் ஒன்றையும் அனுப்பி வைத்தார். 14 பக்கம் இருந்த அந்த பிரசுரத்தில் மாவட்ட ஆட்சியரின் அணிந்துரை, தலைவரின் முன்னுரை, மாவட்ட சிறப்பு, சீர்மிகு நெல்லை மாவட்டம், திருவேங்கடநாதபுரம் ஊராட்சி அமைவிடம் என்ற தலைப்புகளில் தகவல்கள் இருந்தது.
அதில் உள்ள தகவல் நமக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. அதை முதலில் குறிப்பிட்டு விட்டு கோயிலுக்குள் நுழையலாம் என முடிவு செய்தோம்.
திருவேங்கடநாதபுரம் ஊராட்சி திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதியிலும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகவும் அமைந்துளளது. இது பாளையங்கோட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட முன்னீர் பள்ளம் வருவாய் பிரிவை சார்ந்த கிராமம் ஆகும்.
திருவேங்கடநாதபுரம் ஊராட்சியில் அத்திமேடு, அண்ணாநகர், மேலதிருவேங்கடநாதபுரம், கீழதிருவேங்கட நாதபுரம் திருவேங்கடநாதபுரம் , பாடகசாலை ஆகிய ஆறு குக்கிராமங்கள் உள்ளன. இதன் பரப்பளவு 292.27.0 ஹெக்டேர் ஆகும்.
இவ்வூராட்சியின் மொத்த மக்கள் தொகை 2938ஆகும். இந்த ஊராட்சியில் இந்த மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் இந்து பள்ளர்(தேவேந்திர குல வேளார்) இந்த நாடார், புதிரை வண்ணான், இந்து சக்கிலியர், மறவர், பிள்ளைமார், பிராமணர் மற்றும் ஆதிதிராவிடர் செட்டியார். ஆசாரி, ஓதுவார் மற்றம் முஸ்லிம் போன்ற பல்வேறு இன மக்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த பஞ்சாயத்துக்கு தலைவராக சேர்மதுரையும், துணைத் தலைவராக குமரேசன் அவர்களும், உறுப்பினர்களாக முருகம்மாள், முப்பிடாதி, சுப்பிரமணி, நல்லதாய் , சீனவாசன், முத்தரசி, முத்துலெட்சுமி, மீனாட்சி ராஜன் ஆகியோர் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.
திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ், நான்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இந்த பஞ்சாயத்துக்கு சேர்மனாக தங்கபாண்டி அவர்களும், ஒன்றிய கவுன்சிலராக ராஜாராம் அவர்களும், மாவட்ட கவுன்சிலராக கனகராஜ் ஆகியோரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த தகவலை கூறிவிட்டு, மற்ற தகவலை நான் நேரில் வந்து கூறுகிறேன். அதற்கிடையில் துணைத்தலைவரிடமும், பஞ்சாயத்து கிளார்க்கிடமும் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறிபோனை வைத்தார்.
துணைத்தலைவர் குமரேசனும், பஞ்சாயத்து கிளார்க் குமரேசனும் என்னை சந்தித்து தகவல் பரிமாறிக் கொண்டார்கள். இதற்கிடையில் தூத்துக்குடி கமிஷனர் மதுபாலன் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார்கள். அவருடைய குழந்தைக்கு மொட்டை போட்டு நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.
கமிஷனர் அவர்களை நான் ஏற்கனவே தூத்துக்குடி புத்தக கண்காட்சியில் வைத்து சந்தித்து இருக்கிறேன். புத்தகண்காட்சி, புகைப்பட கண்காட்சி நடத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன், வணக்கத்துக்குரிய மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருடன் உறுதுணையாக இருந்து வெற்றியோடு செய்து முடித்திருந்தார். புத்தக கண்காட்சி கமிட்டியில் நானும் இருந்தேன் என்பது எனக்கு பெருமை.
அவர் கோயிலுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவருடைய தாயார் திருநெல்வேலி சித்தா மருத்துவ மனையின் முதல்வர் மலர் விழி என்பது. அவருடைய தந்தை நூல்களை படிப்பதிலும், சேரிப்பதிலும் முக்கியத்துவம் கொடுத்து வருபவர். என்னை கண்டவுடன சந்தோசமாக எனது தாமிரபரணி பயணத்தினை பற்றி கேட்டறிந்து கொண்டார்.
அதன் பின் நான் பஞ்சாயத்து கிராமங்கள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டறிந்தோம்.
திருவேங்கடநாதபுரம் பஞ்சாயத்தின் எல்கைகள் விவரம் வருமாறு. கிட்டத்தட்ட திருநெல்வேலி கால்வாய், தாமிரபரணி ஆறு, கோடகன் கால்வாய், சங்காணி திரடுக்குள்ளே இந்த பஞ்சாயத்து உள்ளது.
இதன் எல்கையாக வடக்கே திருநெல்வேலி மாநகராட்சியும், தெற்கே தாமிரபரணி நதியும், மேற்கே மானூர் ஒன்றியத்தின் எல்கையும், கிழக்கே குன்னத்தூர் பஞ்சாயத்தும் உள்ளது.
அத்திமேடு
திருவேங்கடநாதபுரம் பஞ்சாயத்தில் உள்ள குக்கிராமங்களில் அத்தி மேடு ஒரு கிராமமாகும். இந்த கிராமம் கோயிலுக்கு மேற்புறம் உள்ளது. மேற்கே நரசிங்கநல்லூர் பஞ்சாயத்தும், தெற்கே கருங்காடும், கிழக்கே அண்ணா நகரும் கொண்டுள்ளது.
இந்த பஞ்சாயத்தில்தேவேந்திர குல வேளாளர்கள் வணங்கும் முப்பிடாதி அம்மனும், பிள்ளைமார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மனும், செல்வவிநாயகர் கோயிலும் உள்ளது.
அண்ணாநகர்
அண்ணாநகரில் தேவேந்திர குலவேளாளர் மற்றும் பறையர் இன மக்களும் வசித்து வருகிறார்கள். இங்கு இவர்கள் வணங்கும் முப்பிடாதி அம்மன் தனித்தனியாக உள்ளார். வடக்கே தாமிரபரணி ஆறும், தெற்கே திருநெல்வேலி கால்வாய் வயல்வெளிகளும், கிழக்கே திருவேங்கடநாதபுரம் பகுதியும், மேற்கே அத்திமேடு பகுதியும் உள்ளது.
மேலதிருவேங்கடநாதபுரம்
இந்த கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்களம் யாதவர் மக்களும் வசித்து வருகிறார்கள்.
இங்கு இரட்டடை திருப்பதி, சீவலப்பேரி சுடலை, உள்பட பல கோயில்கள் உள்ளன. இந்த கிராமத்தில்தான் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி உள்ளது. மேலும் இவ்விடத்தில் தான் ராதாசாமி பல்கலைகழகம் உள்ளது. இங்கு ராதாசாமி பெயரில் ஒரு தொடக்கப்பள்ளியும் இயங்கி வருகிறது. இந்த கிராமத்துக்கு எல்கையாக வடக்கே ஒப்பாணி குளம், தெற்கே தென்திருப்பதி கோயில், மேற்கே அண்ணாநகர், கிழக்கே பொத்தை நந்தன் குளம் உள்ளது.
திருவேங்கடநாதபுரம்
இந்த கிராமம் தென் திருப்பதியை மத்தியாக வைத்து சுற்றி அமைந்துள்ளது. இதன் எல்கையாக வடக்கேமேலதிருவேங்கடநாதபுரம், தெற்கே தாமிபரணி ஆறு மற்றும் திருநெல்வேலி கால்வாய், மேற்கே அண்ணாநகர், கிழக்கே கீழ தீருவேங்கடநாதபுரம் உள்ளது.
இந்த கிராமத்தில் தான் முக்கிய தீர்த்தமான ஸ்ரீனிவாச தீர்த்த கட்டம் என்னும் பைலர் தீர்த்தம், தென்திருப்பதி என அழைக்கப்படும் வெங்கிடாசலபதி கோயில், ஜயன் சாஸ்தா கோயில், ஆறுமுக மங்கலம் சுடலைகோயில் உள்பட பல கோயில் உள்ளது.
இந்த இடத்தில் பஞ்சாயத்து கிளார்க் கூறும் போது தகவல் ஒன்றை கூறினார். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் கால்வாய் கிராமத்தில் உள்ள மக்கள் வணங்கும தெய்வங்களே இங்குள்ளது. அவர்கள் விவாசாய தொழிலுக்காக இங்கு வந்தவர்கள் இங்கேயே தங்கி விட்டார்கள். இங்குள்ள ஐகோர்ட் மகராஜா கோயில் ஆறுமுகமங்கலத்துக்கு முந்தையது என்கிறார். அவர் அதற்கான காரணத்தினை இவ்வாறு சொல்லுகிறார். எங்கள் ஊரில் முன்னோர்கள் ஐகோர்டு மகராஜா சுடலையை மூலஸ்தானமாக இங்கே தான் வைத்து வணங்கி வந்தனர். அதன்பிறகு ஆறுமுக மங்கலத்துக்கு பிடி மண் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். ஆகவே தான் எங்கள் ஊரில் வெள்ளிக்கிழமை கோயில்கொடை விழா கொண்டாடுவோம். ஆறுமுக மங்கலத்தில் செவ்வாய் கிழமை கோயில் கொடைவிழா அதன் பிறகே நடைபெறும். வெள்ளிக்கிழமையை பொறுத்தவரை சுடலை திருவேங்கடநாதபுரத்தில்தான் இருப்பார். எனவே தான் மற்ற நாளில் ஆறுமுக மங்கலத்தில்கொடை விழா நடத்துகிறார்கள் என்று கூறினார்.
தென்திருப்பதி பற்றி நாம் இந்த நூலில் அடுத்த பகுதியில் விரிவாக காணுவோம்.
கீழதிருவேங்கட நாதபுரம்
கீழ திருவேங்கட நாதபுரத்தில் தான் கீழ்திருப்பதி, ராகு ஸ்தலமாக கோதை பரமேஸ்வரர் கோயில் உள்பட பல கோயில்கள் உள்ளன. இந்த இடத்தினை தான் சங்காணி என்று கூறுவார்கள். கீழத்திருப்பதி கோயிலை சுற்றி ஒரு காலத்தில் அக்ரகாரம் அமைந்திருந்தது. தற்போது இந்த இடத்தில் வயல்வெளிகளும் , காடுகளும் வளர்ந்து காணப்படுகிறது.
இவ்விடத்தில் தான் குருந்துடையார் சாஸ்தா கோயில் உள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழிகுடி என்னும் கிராமத்தில் நான் குருந்துடையார் சாஸ்தாவை பார்த்து இருக்கிறேன். இங்கு கல்லிலால் ஆன ஆழி உண்டு. இந்த ஆழிகள் பெயராலே அவ்வூர் ஆழிகுடி என்று வந்தது என கூறுவார்கள். ஆழிகள் குடிகொண்ட ஊர் ஆழிகுடி.
அந்த ஆழிகுடியில் இருந்து பிடிமண் எடுத்து வந்தே இவ்வூரில் குருந்துடையார் சாஸ்தா கோயிலை வணங்கி வருகிறார்கள். இதுபோலவே முன்னீர்பள்ளம், ஆரைக்குளம் அருகில் குருந்துடையார் சாஸ்தா கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கும் நாங்கள் சென்று வந்துள்ளோம். இங்கு பங்குனி உத்திர தினவிழாவை கொண்டாடி வருகிறர்கள்.
தொடர்ந்த சுடலை கோயில் இங்கே உள்ளது. இந்த சுடலை கோயில் தேவர் சமுதாயத்துக்-கு பாத்தியப்பட்டது. சிவலப்பேரி சுடலை என இந்த கோயில்களை கூறுகிறார்கள்.
இந்த இடத்திலும் ஒரு முப்பிடாதி அம்மன் கோயில் உள்ளது. இந்த முப்பிடாதி அம்மன் கோயிலுக்கு கடந்த 16.06.2016 அன்று கும்பாபிசேகம் நடந்துள்ளது. அதில் ஒரு கல்வெட்டும் உள்ளது.
நிகழும் மங்களகரமான 1191ஆம் ஆண்டு துர்முகி வருடம் ஆனி மாம் 2 மம் தேதி (16.06.2016 வியாழக்கிழமையும், சுக்ல பட்ச ஏகாதசி திதியும் சுவாதி நட்சத்திருமும்அமரித் யோகமும்கூடிய சுபயோக சுப நன்னாளில் காலை மணி 10.15 க்கு மேல் 11க்குள் புதன்நோரையில் பூரண நேத்ர ஜீவன் கூடிய சிம்ம லக்னத்தில் அருள்தரும் ஸ்ரீமுப்பிடாதி அம்பாள், அஅருள்தரும் பார்வதி அமம்பாள்மற்று பரிவார தேவதைகளுக்குபுனராவர்த்தன சாடடபந்தன மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. திருப்பணி செம்மல் உயர்திரு எஸ் விஸ்வநாத பாண்டியன் அவர்கள் முன்னாள் துணை மேயர் நெல்லை மாநகரம், கர்ப்பகிரகத்திடில் அம்பாள் புதுபித்தல், விமானம் அமைத்தல் மேல்பகுதியில் தகளக்கற்கள் அமைத்தல் கோவில உள்புறம் சலவைகற்கள் அமைத்தல் தளகற்கள் அ¬த்தல் ஆகிவே¬ செய்து கொடுத்துள்ளார்கள். இதற்கான ஏற்பாடுகளை கீழத்திருவேங்கிட நாதபுரம் சங்காணி ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
இவ்விடத்தில் தான் முன்னாள் நெல்லை துணை மேயர் விஸ்வநாதபாண்டியன் அவர்களின் அடக்க ஸ்தலமும் உள்ளது.
பாடசாலை
திருவேங்கடநாதபுரம் பஞ்சாயத்தில் பாடசாலை என்னும் கிராமம் எல்கையாக அமைந்துள்ளது. வயல்வெளிகளுக்கும் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு இடையில் அழகாய் அமைந்துள்ளது இந்தகிராமம். தெற்கே மற்றும் கிழக்கே தாமிரபரணியும் வடக்கே விளாகமும், மேற்கே வயல்வெளிகளும் உள்ளது. இந்த கோயிலில் பழமையான மீனாட்சி அம்மன்கோயில் உள்ளது. இந்த கோயிலில் பழமையான மரங்களை பார்க்கும் போது சுமார் 400 வருடங்கள் பழமையான கோயிலாக இந்த கோயில் விளங்கும் என கூறப்படுகிறது.
கோயில் முன்பேவானொலி மன்ற புதிய கட்டிட திறப்பு விழா 9.02.1972 அன்று நடந்துள்ளது. அப்போது செ. சங்கரசுப்பு ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். பாளை ஊராட்சி ஒன்றிய சேர்மன் சித்திரை பாண்டியன் இந்த வானொலி கட்டிடத்தினை திறந்து வைத்துள்ளார். அந்த சமயத்தில் பாளையங்கோட்டை ஒன்றிய ஆணையாளராக அண்ணாமலை என்பவரம் மேற்பார்வையாளாக சுப்பிரமணியன் என்பவரும் பணியாற்றி உள்ளார்.
இந்த ஊருக்கு ஏன் பாடக சாலை என்று பெயர் வந்தது. இதைப்பற்றி பெரியவர்களிடம் கேட்டுப்பார்த்தேன்.
ஒருகாலத்தில் இந்த பகுதியில் வாழ்ந்த மீனாட்சி பக்தர் மதுரை சென்று மீனாட்சியை வணங்கி வந்துள்ளார். அவர் இந்த பகுதியில் பாடசாலை ஒன்றை அமைத்து அதன் மூலம் இந்த பகுதி மக்களுக்கு வேத பாடம் சொல்லிகொடுக்க முடிவு செய்தார். அந்த காலத்தில் வேதபாடம் சொல்லி கொடுக்க அந்தணர்கள் மட்டுமே இயலும். ஆனால் இவரோ அந்தணர் குடும்பத்தினை சேர்ந்தவர் அல்ல. வயல்வெளிகளில் வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். எனவே அவருக்கு தனது பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேத பாடம் தெரியவேண்டும் என இந்த கோயிலில் வைத்து பாடசாலை அமைத்து நடத்தியுள்ளார். ஆகவே தான் இந்த ஊருக்கு பாடசாலை என்று பெயர் வந்துள்ளது.
தற்போதும் எந்த ஊரிலும் இல்லாத அதிசமாக இந்த ஊரில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் மூலவருக்கு சிலை இல்லை. வரைபடம் மட்டுமே வைத்து வணங்கி வருகிறார்கள்.


