தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி மதிப்பில் நடந்து வரும் விமான நிலைய விரிவாக்க பணிகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தென்மண்டல பொறியியல் திட்ட பொதுமேலாளர் ஸ்ரீகிருஷ்ணா தூத்துக்குடி வந்தார். விரிவாக்கப் பணிகளை பார்வையிட்டு அவற்றை மேற்கொண்டு வரும் நிறுவனத்தினருடன் ஆலோசனை நடத்தினார். பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இது குறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் என்.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது ரூ.380 கோடி செலவில் ஒரே நேரத்தில் 600 பயணிகள் இறக்கும் வகையில் புதிய பயணிகள் முனையம், 1,400 சதுர மீட்டர் பரப்பில் தீயணைப்பு நிலையம், கட்டுப்பாட்டு கோபுரம் அடங்கிய தொழில்நுட்ப அறை அமைக்கும் பணிகள் நடந்து வருசின்றன. இந்த பணிகள் அனைத்தும் 2023&ம் ஆண்டு முடிவடையும். விமான நிலையத்தில் உள்ள ஓடுதளத்தை 45 மீட்டராக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. சிக்னல் விளக்கு அமைப்பதற்கு சுற்றுசூழல்துறை அனுமதி கிடைத்து உள்ளது. சிக்னல் விளக்கு அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்படும்.
விமான ஓடுதளம் அமைக்கும் பணி முடிவடைந்த பிறகு இரவுநேரத்தில் விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏ&321 ரக பெரிய விமானங்களை தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்க விமான நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது. இங்கிருந்து விமானத்தை இயக்கும் நிறுவனமே இரவு நேரங்களிலும் விமானத்தை இயக்க தயாராக உள்ளது.
விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். கவுன்டர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்


