நாலாட்டின்புத்தூர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவத்தில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தாய் (90). தற்போது உறவினர் சுப்புலட்சுமி (65) வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் சின்னத்தாய் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் சின்னத்தாய் காதில் அணிந்திருந்த கம்மலை திருடிச் சென்றனர்.
இதையறிந்த மூதாட்டி, சுப்புலட்சுமியிடம் கூறினார். இதுகுறித்து சுப்புலட்சுமி நாலாட்டின்புத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை நாலாட்டின்புத்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த மகாராஜன் மகன் குமார் (47), கோவில்பட்டி கடலையூர் ரோடு பகுதியை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து (29), வெள்ளாளங்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (50) என்பதும், சின்னத்தாயிடம் நகை பறித்தும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, ரூ.10 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.