தூத்துக்குடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் 1055 மனைதாரர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள சங்கரப்பேரி பகுதியில் உள்ள (புல எண்கள் 101 முதல் 105 வரை) சுமார் 29.46 ஏக்கர் அரசு குப்பைக் கிடங்கு நிலத்தை, பட்டா நிலமாக வகைப்பாடு மாற்றம் செய்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பெயருக்கு மாற்ற வேண்டும். வகைப்பாடு மாற்றப்பட்ட நிலத்தை, அங்குள்ள 1055 மனையதாரர்களுக்குச் சிறப்பு முகாம் மூலம் உடனடியாகப் பட்டாவாக வழங்க வேண்டும்.
சர்வே எண்களைத் தவறாக உள்ளீடு செய்து, முறையற்ற வழியில் பத்திரப்பதிவு செய்து பொதுமக்களை ஏமாற்றும் செயலைப் பதிவுத்துறை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பத்திரம் இருக்கு! ஆனால் பட்டா இல்லை!!” என்ற முழக்கத்துடன், தமிழக அரசு மற்றும் வீட்டு வசதி வாரிய நிர்வாகத்திற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், திரளான பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


