கடந்த 20.06.2024 அன்று ஆதிச்சநல்லூர் போயிருந்தேன். குவைத்தி லிருந்து தமிழ்நாடு பொறியாளர் சங்க பொருளாளர் சுப்பிரமணியன் குடும்பத்தோடு வந்திருந்தார்.
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். மதுரை உயர்நீதிமன்றத்தில் மியூசியம் பாதிப்படையவில்லை என வாய் கூசாமல் பொய் சொன்ன மத்திய அரசின் செயல் எனது மனதை கஷ்டப்படுத்தியது.
அங்கே எந்த முன்னேற்றமும் இல்லாமல் மியூசியம் இருந்தது. அங்குள்ள மியூசியத்தினை பராமரிக்க ஆள்கள் இல்லை. ஆங்கே தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மியூசியத்தினை பராமரித்து வந்தனர். அவர்களுக்கு தினக்கூலித்தான். அவர்கள் அங்குள்ள தோட்டத்தினை-ண சிறப்பாக பேணி வைத்திருந் தார்கள். மேலும் இரவு பகல் காவலர்கள் இருந்தார்கள். அவர்கள் அருங்காட்சியகத்துக்குள் இருந்து ஒரு பொருளை கூட எடுத்துக்கொண்டு செல்ல விடாமல் காவல் காத்து வந்தனர். மியூசியத்தில் வரும் பார்வையாளர்கள் பதிவேடு இருந்தது. அதில் வருபவர்கள் பதிவிட்டு வந்தனர். ஆனால் இவை அனைத்துமே தற்போது இல்லை.
பி சைட், சி சைட் இரண்டுமே திறந்து கிடந்தது. நான் செல்லும் போது ஈரோட்டில் இருந்து பலர் வந்திருந்தனர். அவர்களை வரவேற்று இடங்களை காண்பிக்க யாருமே இல்லை. சி சைட்டில் புதை குழியில் கிடைத்த 500க்கும் மேற்பட்ட பொருள்கள் பாதுகாப்பு இன்றி திறந்து கிடக்கிறது. பெரிய பெரிய குழிகளுக்குள் பார்வையாளர்கள் விழுந்தால் கூட அவர்களை காப்பாற்ற இயலாது. அங்கே பொருள்களை பாதுகாக்க வாட்சுமேன் இல்லை.
அருகில் யாரோ நெருப்பை கொளுத்தி போட்டு இருக்கிறார்கள். அதுவும் தானே எரிந்து, போனால் போகுது என மியூசியத்தினை விட்டு விட்டது. இல்லையென்றால் சைட் மியூசியத்தில் கூரைகள் எரிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால் இதையெல்லாம் மத்திய தொல்லியல் துறையினர் கண்டு கொள்ளவே இல்லை. கூலி தொழிலாளி களுக்கு சம்பளம் 6 மாதம் கழித்து கொடுத்தால் கூட அவர்கள் வாங்கி கொள்வார்கள். பாவம், அவர்களையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள். சைட் மியூசியத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். இவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது.
இங்குள்ள பொருள்களை பாதுகாக்கவும் வழியில்லை. இந்தியா விலேயே முதல் முதல் சைட் மியூசியத்தினை உருவாக்கி விட்டு இப்படி பராமரிப்பு இன்றி போட்டு விட்டார்களே. இவர்கள் எங்கே அடிக்கல் நாட்டிய உலக தரம் வாய்ந்த மியூசியத்தினை கட்டப்போகிறார்கள். அதை திறக்கப் போகிறார்கள். வேதனையாக இருந்தது.
இது குறித்து கனி மொழி எம்.பியிடம் பேச வேண்டும். மீண்டும் ஆதிச்சநல்லூரை காப்பாற்ற போராட வேண்டிய சூழ்நிலைத்தான் உள்ளது என நினைக்கும் போது வருத்தமாகத் தான் உள்ளது.
இப்போது மற்றொரு பெரும் பிரச்சனை தாமிரபரணி ஆற்றங்கரையில் மாஞ் சோலை பிரச்சனை தான். சுமார் 99 வருடங்களாக மாஞ்சோலை எஸ்ட் டேட்டில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப் படுகிறார்கள். இது என்ன பிரச்சனை. அதற்கு முன் மாஞ்சோலை எஸ்ட்டேட் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
இதற்காக நான் எழுதிய “தவழ்ந்து வரும் தாமிரபரணி” நூலைத்தான் புரட்டி பார்க்கிறேன்.
1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று தமிழ்நாட்டின் வரலாற்றில் இருக்கும் பல கறுப்புப் பக்கங்களுக் குக் காவல் துறை காரணமாக இருந்துள்ளது. காவல் துறை தவறுகள் நிகழ்த்தும் போதெல்லாம் அதற்குத் துணை போகும் வகையாக அரசுகளும் செயல்பட்டுள்ள.
மாஞ்சோலை எஸ்ட்டேட் எப்படி உருவானது. திருநெல்வேலி மாவட்டத் தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். 1929 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 8,374 ஏக்கர் நிலத்தினை சிங்கம் பட்டி ஜமீன்தாரிடம் குத்தகைக்கு எடுத்தது பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேசன் எனும் நிறுவனம். 1952 ஆம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ் அந்த நிலம் அரசு டைமையாக்கப்டது. ஆனாலும் பாம்பே டிரேடிங் கார்பரேசன் ஆளும் காங்கிரஸ் கட்சியிடம் குத்தைகையைப்புதுப் பித்துக்கொண்டது. பல தலை முறைகளாக அங்கு ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் «லை பார்த்து வந்தனர். அவர்களது கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என மக்கள் அரசியல தலைவர் களிடம் கோரிக்கை வைத்தனர். இதனால் போராட்டம் வந்தது. அப்போது போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து தங்கள் கணவர்களை விடுவிக்க கோரி அடுத்த நாள் போ£டிய பெண்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 652 பேரை விடுவிக்கக் கோரியும் ஊதிய உயர்வு கேட்டும் தொழிலாளர் கள் ஜுலை 23 ஆம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நோக்கி அணி வகுத்தனர். அப்போது நடந்த பேராட்டத்தில் 17 பேர் இறந்தனர். அதில் 2 பெண்களும், 2 வயது குழந்தையும் அடங்குவர்.
இதன் நினைவாக ஜுலை 23 ந்தேதி தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் தற்போது பாம்பே டிரேடிங் கம்பேனிக்கு குத்தகை காலம் முடியும் முன்பே, அங்கு பணியாற்றிய பணியாளர்களை விருப்ப ஓய்வு பெற்று வேலை விட்டு நிற்க ஏற்பாடு செய்து விட்டனர்.
ஒரு காலத்தில் போராடிய இந்த மக்கள் தற்போது போராட முடியாமல், அரசுடமை என்ற பெயரை கொண்டு அப்படியே மாஞ்சோலையை விட்டு கீழே இறக்கி விட்டு விட்டார்கள்.
ஆனாலும் நீதிமன்றத்தில் ஏறி மக்கள் போராடி வருகிறார்கள்.
ஆனாலும் மறக்க முடியாத இடம் மாஞ்சோலை. நெல்லை மாவட்டத்தில் அதிமாக மழை பெய்யும் அற்புதமான இடம். அது மட்டுமா? இங்கே மாஞ்சோலை, காக்காச்சி மலை, நாலு மூக்கு , ஊத்து, குதிரைவெட்டி , கோதையாறு என பல இடங்கள் உள்ளன. இதில் கோதையாறு மின் வாரியத்துக்கு உட்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு சுற்றுலா பயணிகள் நிறுத்தப்பட்டு விட்டனர். இந்த இடத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கு மேலே இருக்கிற லோயர் கோதையாத்து அணைக்கு வந்து விடலாம். இங்கிருந்து அதிகாரிகள் செல்ல விஞ்சு வசதி உண்டு. இதை அதிகாரிகள் மட்டும் பயன்படுத்துவார்கள். அதுபோலவே குதிரை வெட்டி உயரமான இடம். இங்கு வனத்துறை அனுமதி பெற்று தங்கலாம். அதற்கு விடுதி உள்ளது. இந்த இடத்தினை சீவலப்பேரி பாண்டி படத்தில் காட்டுவார்கள். அந்த இடத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி அதிகாலை அந்த இடங்களை சுற்றி பார்வையிட்டால் மிகச்சிறப்பாக இருக்கும். அந்த இடத்துக்கு அனுமதி இருந்தும் அங்கு செல்ல ஊத்து பகுதியில் இருந்து சாலைகள் மிக மோசமாக இருந்த காரணத்தினால் அதற்கு மேலே ஏற இயலாமல். அந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதும் குறைந்து விட்டது. தற்போது மணிமுத்தாறு அருவி. மாஞ்சோலை, காக்காச்சி, நாலு மூக்கு, ஊத்து ஆகிய இடங்களுக்கு செல்லலாம். அங்கு கட்டன் சாயா, ரஸ்க் சுவையாக சாப்பிடலாம். அங்கு நாட்டு கோழி சாப்பாடு ஆடர் செய்து சாப்பிடலாம். சுற்றுலாவோடு சுவையான உணவோடு, மணிமுத்தாறு அருவி குளிப்போடு நெல்லை மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாகவும் இவ்விடம் இருந்தது.
ஆனால் இப்போது இங்கு வந்த சோதனைதான் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பேசு பொருளாக மாறி விட்டது.
(நதி வற்றாமல் ஓடும்)