கயத்தாறு அருகே, பணம் கேட்டு தாயை மிரட்டுவதற்காக கிணற்றில் குதித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி பஞ்சாயத்து மஞ்சநம்பிகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் ராமர் (24). கூலி தொழிலாளியான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல், அடிக்கடி செலவுக்கு பெற்றோரிடம் பணம் கேட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் ராமர் வேலைக்கு செல்லாமல் தாயாரிடம் பணம் கேட்டார். ஆனால் தாய் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
அப்போது, பணம் தரவில்லையெனில், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து விடுவதாக ராமர் மிரட்டி உள்ளார்.சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் சிறிதளவு உள்ளது. ஏற்கனவே ராமர் தனது தாயாரிடம் பணம் கேட்டு இதுபோல் பலமுறை தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ராமரின் தற்கொலை மிரட்டலை தாயார் பொருட்படுத்தாமல் சென்று விட்டார்.
ஆனால் ராமர் கிணற்றில் குதித்து விட்டார். அதன்பின்னர் ராமர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. எனவே குடும்பத்தினர் கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது, அங்கு ராமர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கிணற்றில் நீர்மட்டம் குறைந்ததால், கல்லில் மோதி ராமர் பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த ராமரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கயத்தாறு அருகே பணம் கேட்டு தாயாரை மிரட்டுவதற்காக கிணற்றில் குதித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


