
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நெல்சன் பொன்ராஜ். தூத்துக்குடி அருகில் உள்ள பண்டாரம்பட்டி அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த செலவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்னை செல்ல திட்டமிட்டார். அவர்களுடன் முன்னாள் மாணவர்கள் 7 பேரும் இரண்டு பெற்றோர்களும் இணைந்து கொண்டனர். இன்று(22.03.2025) காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை கிளம்பினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து உற்சாகமாக விமானம் ஏறிய மாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. மிக சந்தோசமாக சென்னை வந்து இறங்கினர். அவர்களை சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சைமன் ஜெயக்குமார் த¬¬மையில் சங்கத்தினர் வரவேற்றனர். தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினர். அதன் பின் மாணவ மாணவிகள் அங்கிருந்து கிளம்பினார்கள். அவர்கள் மின்சார ரயில் மூலம் வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு சென்றார்கள். அங்கே பகல் முழுவதும் மிருகங்களை கண்டு ரசிக்கிறார்கள். அதன் பின் அங்கிருந்து மெட்ரோ ரயில்மூலம் எக்மோர் வருகிறார்கள். இன்று இரவு முத்து நகர் எக்ஸ்பிரஸில் கிளம்பி நாளை காலை தூத்துக்குடி திரும்புகிறார்கள்.
மாணவர்களின் கனவை நிறைவேற்ற ஆசிரியர் ஒருவர் சுமார் 1,50 லட்சம் செலவு செய்து தனது மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை அழைத்துக்கொண்டு விமானத்தினையும், ரயில் போக்குவரத்தினையும், மிருக காட்சியையும் பார்க்க வைக்க நடவடிக்கை எடுத்து இருப்பது, மிகச்சிறப்பான செயலாகும்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் கூறும் போது, “தினமும் எங்கள் தலைக்கு மேலே விமானம் பறக்கிறது. அருகில் தான் ரயில் செல்லும் சத்தம் கேட்கிறது, ஆனால் நாங்கள் ஒரு நாளும் விமானத்திலும் ரயிலிலும் பயணம் செய்ய வில்லை என என் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏக்கமாக தெரிவித்தார்கள். “விலங்குகளை பார்க்க வேண்டும் என்றால் வண்டலூர் மிருககாட்சி சாலைக்குத்தான் செல்லவேண்டும். ஆனால் எங்கள் வறுமையில் நாங்கள் எங்கே செல்ல முடியும்” என்றும் வேதனை தெரிவித்தனர். எனவே நான் எனது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை விமான நிலையத்தில் கூட்டிச் செல்கிறேன். அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோசம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க தலைவர் வழக்கறிஞர் சைமன் ஜெயக்குமார் கூறும் போது, “பெரும்பாலுமே ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தலைநகர் வருகை தரும் மிகப்பெரிய வி.ஐ.பிகளையும் நாங்கள் விமான நிலையத்தில் வந்து வரவேற்று இருக்கிறோம். ஒரு ஆசிரியர் தனது சொந்த செலவில் தனது மாணவ மாணவிகளோடு விமானத்தில் சென்னை வருகிறார் என்று முகநூலில் செய்தி பார்த்தவுடன் ஆனந்தம் அடைந்தோம். காலையில் விமான நிலையத்தில் காத்து கிடந்து அவர்களை வரவேற்றபோது மிகவும் சந்தோசமடைந்தோம். பள்ளி மாணவ மாணவிகளின் ஏக்கத்தினை அறிந்த உதவி செய்த தலைமை ஆசிரியருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டோம். இவரை போல பல ஆசிரியர்கள் முன்வரவேண்டும்” என்றார்.
இது குறித்து மாணவ, மாணவிகள் கூறும்போது, முதல் முறையாக விமானத்தில் பறந்ததை எங்களால் மறக்க முடியாது. இந்த வாய்ப்பை தந்த எங்கள் தலைமை ஆசிரியருக்கு மிக்க நன்றி என்றனர்.
ஏற்கனவே நெல்சன் பொன்ராஜ் கொரனா காலத்தில் தான் பெற்ற ஊதியத்தினை கொண்டு இந்த பள்ளிக்கு 7 லட்சம் செலவில் கட்டிடம் கட்டியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தனது சொந்த செலவில் டிஜிட்டல் திரையை பள்ளியில் அமைத்துள்ளார். இவருக்கு தற்போது பாராட்டு குவிந்து வருகிறது.