முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அதுமட்டுமல்லாமல் திருவிழா காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
இந்த நிலையில் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பறவை பகுதியைச் சேர்ந்த 50 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் சொகுசு பேருந்து மூலம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதை சுற்றியுள்ள நவ திருப்பதி கோவில்களில் தரிசனம் செய்வதற்காக அதிகாலையிலேயே கிளம்பி வருகை தந்துள்ளனர். அவர்கள் மதியத்திற்குள் அனைத்து கோவில்களிலும் தரிசனம் முடித்து விட்டதால் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதற்காக அவர்கள் வந்த சொகுசு பேருந்து திருச்செந்தூர் கடற்கரை பகுதிக்கு வந்துள்ளது. அப்போது கடற்கரை மணலில் இவர்கள் வந்த பேருந்து சிக்கியது. நீண்ட நேரம் போராடி மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதற்கிடையில் சொசுகு பேருந்தில் வந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனத்தை முடித்து விட்டு திரும்பினர். ஆனால் பேருந்து வெளியே வரவில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சக ஓட்டுனர்கள், ஐயப்ப பக்தர்கள், அருகே உள்ள அமலிநகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் என ஏராளமானோர் மணலை அப்புறப்படுத்தி நீண்ட நேரம் போராடி சொகுசு பேருந்தை வெளியே கொண்டு வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் மற்றொரு பேருந்தும் சிக்கி 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது. எனவே இந்த கடற்கரை பகுதியில் பேருந்துகளை நிறுத்தக்கூடாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் விளம்பர பதாகைகள் வைத்தால் ஓட்டுனர்கள் கவனமாக இருப்போம் என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


