தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் சிறப்பு விற்பனைத் திட்டங்களுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் அன்றாட சமையல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசின் விலைக்குறைப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத்துறையின் மூலம் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் தொகுப்பு, வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு மற்றும் சன்ன ரக அரிசி ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை, ஸ்பிக் பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை, மதுரா கோட்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை, தூத்துக்குடி கூட்டுறவு பண்டகசாலை மற்றும் தூத்துக்குடி துறைமுக பணியாளர் கூட்டுறவு பண்டகசாலை ஆகிய 5 விற்பனை நிலையங்கள் வாயிலாக இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பில் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய். எலுமிச்சை, இஞ்சி மற்றும் தேங்காய் என 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகள் தரம் பிரிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் எடையிடப்பட்டு வழங்கப்படும். இத்தொகுப்பு வெளிச்சந்தை விலையைவிடக் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் ஸ்பிக் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையின் முத்தையாபுரம் விற்பனை நிலையம் மூலம் 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அனைத்துப் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் வழக்கமான வேலை நேரங்களில் இத்தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதிகமானோர் பயன்பெறும் நோக்கில் ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக விற்பனை மையங்களில் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் இத்திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
பொதுமக்களின் பேராதரவுடன் தீபாவளி சிறப்பு மளிகைப் பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசின் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கூட்டுறவுத்துறை முழுமுனைப்புடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேஷ் தெரிவித்துள்ளார்.


