தூத்துக்குடியில் நெல்லை சரகத்திற்குட்பட்ட ஊர்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி தருவை மைதானத்தில் இன்று திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரம், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஊர்காவல் படையினருக்கான 28வது திருநெல்வேலி சரக அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதில் திருநெல்வேலி சரக ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊர்க்காவல் படையினருக்கு ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கபடி, நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி சரக ஊர்காவல் படை துணை தளபதி பிரகாஷ் குமார், தூத்துக்குடி ஊர்காவல் படை வட்டார தளபதி பாலமுருகன், துணை வட்டார தளபதி கௌசல்யா மற்றும் ஊர்காவல் படையினர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராம், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் மற்றும் திருநெல்வேலி சரக ஊர்காவல் படையினர் பலர் கலந்து கொண்டனர்.


