தூத்துக்குடி மாவட்டக் காவல் துறையின் துப்பறியும் பிரிவில், குற்றச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள்களைக் கண்டறிவதற்காக புதிதாகப் பயிற்சி அளிக்கப்பட்ட 2 மோப்ப நாய்கள் முறைப்படி பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
குற்றச் சம்பவங்கள் நடக்கும் இடங்களில் தடயங்களை மோப்பம் பிடிக்கவும், வெடிகுண்டு மற்றும் போதைப்பொருள்களைக் கண்டறியவும் மோப்ப நாய்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. தூத்துக்குடி மாவட்ட மோப்ப நாய் பிரிவுக்குக் கூடுதல் நாய்கள் தேவைப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் 25-ஆம் தேதி 2 நாய் குட்டிகள் வாங்கப்பட்டு மோப்ப நாய் படையில் ஒப்படைக்கப்பட்டன.
பெயரிடுதல்: அந்த 2 நாய்க்குட்டிகளுக்கும் ‘ரிக்கி’ மற்றும் ‘தாமிரா’ எனப் பெயரிட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள துப்பறியும் நாய் பயிற்சிப் பள்ளியில் 2 நாய்களுக்கும் தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி காலம் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, 2 மோப்ப நாய்களும் தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்பட்டுப் பணியில் இணைக்கப்பட்டன.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் முன்னிலையில் ஒரு நாய் குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதற்காக ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு நாய் போதைப்பொருள்களைக் கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட மோப்ப நாய் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், ரிக்கி மற்றும் தாமிரா ஆகிய இரு மோப்ப நாய்களுக்கும் தொடர்ந்து சிறப்பான முறையில் பயிற்சிகளை அளித்து, முறையாகப் பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவு காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்நிகழ்வில் மோப்ப நாய் படைப்பிரிவு காவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


