தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேய்க்குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தங்கதுரை மகன் புளேந்திரநாதன் (59), என்பவர் அப்பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார்.கடந்த 22.05.2021 அன்று புளேந்திரநாதன் மகன் தங்க அருண் (19) என்பவர் கடையில் இருந்த போது அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் வெள்ளுர் வடக்குதெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவா (எ) சிவலிங்கம் (27) என்பவர் தங்க அருணை தாக்கி கடையில் இருந்த விவசாய மருந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து புளேந்திரநாதன் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான எதிரி சிவா (எ) சிவலிங்கத்தை தேடி வந்தனர். இந்நிலையில் எதிரி சிவா (எ) சிவலிங்கம் நாசரேத் காவல் நிலைய 5 வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமைறைவாக இருந்து வந்தார்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், தலைமைக் காவலர் குணசேகரன், முதல்நிலை காவலர்கள் வேம்புராஜ், ஆனந்தராஜ் மற்றும் காவலர்கள் ஜாண், நாராயணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள பிரபல ரவுடியான பிடிவாரண்ட் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, ஸ்ரீவைகுண்டம் பஜார் பகுதியில் வைத்து நேற்று சிவா (எ) சிவலிங்கத்தை மடக்கி பிடித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இவர் மீது செய்துங்கநல்லூர், முறப்பநாடு, சாத்தான்குளம் ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.


