சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ‘முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது’ பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சரவணக்குமார், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாளமுத்துநகரைச் சேர்ந்த சரவணக்குமார் சமூகப் பணிகளில் சிறந்து விளங்கியதற்காக, சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து மாநில இளைஞர் விருதுக்கான பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ. 1,00,000/-க்கான காசோலையைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (17.08.2026) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனைசந்தித்துத் தனது விருதினைக் காண்பித்து நேரில் வாழ்த்து பெற்றார்.
இவ்விருதானது போதைப்பொருள் விழிப்புணர்வு, செயல்முறை கற்றல் திட்டம், பொது விழிப்புணர்வு முகாம், சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம், தேசிய மருத்துவர்கள் தினம், தாயின் பெயரில் ஒரு மரம் நடுதல், புகைபிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு, தோல் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கம், இலவச மருத்துவ முகாம் தன்னார்வலர் பணி, விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், இரத்த தான விழிப்புணர்வு, பின்தங்கியோருக்கான குரல் ஒலிக்கும் நிகழ்ச்சி, பள்ளிப் படிப்பை இடைநிற்றல் மாணவர்களுடனான சந்திப்பு, ஒற்றுமைப் பேரணி போன்ற சேவைகள் செய்த காரணத்தினால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயரத்தினராஜ் ஆகியோர் உள்ளனர்


