எப்போதும் வென்றான் அருகே ஆட்டோ கண்ணாடியை உடைத்து உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகேயுள்ள ஆதனூர் ஆறுமுகம் மகன் தங்க முத்துவேல் (23) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த செல்ல கிருஷ்ணன் மகன் சிவகுமார் (23), என்பவரும் உறவினர்கள். 20 நாட்களுக்கு முன்பு செல்வகுமார், தங்கமுத்துவேலுக்கு சொந்தமான ஆட்டோவில் அமர்ந்துகொண்டு மது அருந்தியுள்ளார். இதை பார்த்த தங்க முத்துவேல் சிவக்குமாரை சத்தம் போட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 13.01.2022 அன்று சிவகுமார் தங்க முத்துவேலிடம் தகராறு செய்து அவரை கையால் தாக்கி, அவரது ஆட்டோ கண்ணாடியையும் உடைத்து விட்டு கொலைமிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தங்க முத்துவேல் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தார். மேலும் அவர் மீது ஏற்கனவே எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு உட்பட 2 வழக்குகள் உள்ளது.


