தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் ரூ.10.13 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் கூட்டுறவுக் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: ஆண்டு தோறும் முன்னாள் பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் திங்கள் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா “தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் பங்கு” எனும் கருப்பொருளை வாயமாகக் கொண்டு கொண்டப்பட்டு வருகிறது.
கூட்டுறவுத்துறையின் மிக முக்கியமான ஒரு நிகழ்வான கூட்டுறவு வார விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வரலாற்று நிகழ்வாக பார்த்தால் கூட்டுறவு என்பது முதன்முதலில் தமிழ்நாட்டில் தான் தொடங்கியிருக்கிறது. நமது முதல் கூட்டுறவு அமைப்பு என்பது சென்னையில் தொடங்கப்பட்டது.
அதற்கு அடுத்தநிலையில் நடேசன் தான் கூட்டுறவு இயக்கத்தை நமது தமிழகத்தில் தொடங்கி அதன்பிறகு பிற மாநிலங்களுக்கு எல்லாம் விரிவுசெய்து ஒரு சிறந்த அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். கூட்டுறவுத்துறையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூற வேண்டுமென்றால் அதிகப்படியாக மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கி வரக்கூடிய ஒரு துறையாக விளங்கி வருகிறது.
மாவட்ட கடன் திட்டத்தினுடைய மொத்த கடன் திட்ட பகுதியில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு கடன் வழங்கக்கூடிய ஒரு துறையாக கூட்டுறவு வங்கிகளும், இன்னொரு 50 சதவிகிதம் திட்டம் ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட வங்கிகளான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் ஒவ்வொருவரும் நமது கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
அத்துடன் சேர்த்து பால்வளத்துறையில் உள்ள கூட்டுறவு அமைப்புகளிலும் வங்கி சேவை நடைபெற்று வருகிறது. கூட்டுறவு வங்கிகளுடைய பயன்கள் என்பது வெறும் கடன் கொடுப்பது மட்டுமல்லாமல் அதற்கு அடுத்தநிலையில் பல்வேறு விதமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கு ஏதுவாக கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை பார்வைக்காக வைத்துள்ளார்கள். அது சந்தையில் வரவேற்கக்கூடிய பொருட்களாக வளர்வதற்கு மக்கள் முயற்சி எடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் பனை, பனை சார்ந்த கூட்டுறவிற்காக தனியாக சங்கங்கள் எல்லாம் இருக்கின்றன.
அந்த சங்கங்கள் எல்லாம் இன்னும் மென்மேலும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதேபோன்று வேளாண் பொருட்கள் சார்ந்து உற்பத்தி செய்யக்கூடிய பிற பொருட்களையும், அதாவது மதிப்புக்கூட்டப்பட்ட தேங்காய் எண்ணெயாக இருக்கட்டும், கடலை எண்ணெயாக இருக்கட்டும் இது போன்ற பிற உணவுப்பொருட்கள் அனைத்தையும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி உங்களுக்கு இருக்கக்கூடிய சங்கில் தொடர்பு அமைப்பினால் எல்லா ஊர்களிலும், எல்லா வணிகக் கடைகளிலும் உங்களால் வியாபாரம் செய்ய இயலும். இந்த அளவிற்கு ஒரு வலிமையான சந்தைப்படுத்துதல் வலைப்பின்னல் கொண்டுள்ள அமைப்பு வேறு எந்த ஒரு அமைப்புகளுக்கும் இல்லை.
இந்த வலைப்பின்னல் அமைப்பினை நன்றாக பயன்படுத்தி ஒரு மிகப் பெரிய சந்தை வாய்ப்பை அடைய முடியும். இந்த சந்தை வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்நேரத்தில் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன். கடன் வழங்கும் சேவைப் பணி முக்கியப்பணியாக இருக்கிறது. பயிர் கடன்கள், நகைக்கடன் உள்ளிட்ட கடன்களெல்லாம் நாம் அதிகமாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலமாகத்தான் பெறுகிறோம். இந்த தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலமாக மிக மிக குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படக்கூடிய இந்த கடன்கள் எல்லாம் நீங்கள் உரிய காலத்தில் சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் சரியான நேரத்தில் அவர்களுக்கு கடன் கொடுப்பதை நமது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கி மூலமாக பல்வேறு வகையான கடன்களை நீங்கள் விரிவுபடுத்த வேண்டுமென விரும்புகிறேன். கல்விக்கடன் கொடுப்பதற்கான திட்டங்களை தொடங்க வேண்டும். வரும் ஆண்டுகளில் நமது பகுதிகளில் இருந்து படிக்கக்கூடிய இளைஞர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அதை நோக்கியும் நாம் சிந்திக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
பின்னர், சிறப்பாக செயல்பட்ட 16 கூட்டுறவு சங்கங்கள், 3 சிறந்த கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மற்றும் 3 நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு கேடயங்களையும், பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவ மாணவியர்களுக்கும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், 1832 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், சிறு வணிகக் கடன், டாம்கோ கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், வீட்டு அடமானக் கடன் என மொத்தம் ரூ.10.13 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இரா.இராஜேஷ், இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் / பணியாளர் அலுவலர் த.விஜயகுமாரி. தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சரக துணைப்பதிவாளர் இராராமகிருஷ்ணன், திருச்செந்தூர் சரக துணைப்பதிவாளர் செல்வி.இரா.சக்தி பெமிலா, துணைப்பதிவாளர் (பொவிதி) அ.சுப்புராஜ், திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கி செயலாட்சியர் மு.சீனிவாசன், தூத்துக்குடி மேலுர் கூட்டுறவு நகர வங்கியின் செயலாட்சியர் தி.க.ராமசாமி, பிரகாசபுரம் நகர சுட்டுறவு வங்கியின் செயலாட்சியர் கு.பா.மாரியப்பன், கூட்டுறவுத்துறை அலுவர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


