குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடிபோதையில் ஒரு குறிப்பிட்ட மத பெண்களை பற்றி தவறாக பேசி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் கைது – சாதி, மத கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டதில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடன்குடி புதுமனை பள்ளிவாசல் கிழக்குத் தெருவை சேர்ந்த மகாலிங்கம் ஜெயக்குமார் (40) என்பவர் நேற்று (13.12.2021) குடிபோதையில் ஒரு குறிப்பிட்ட மத பெண்களை தவறாக பேசி வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து மதப் பிரச்சினை ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளார்.
இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த அப்துல் ஹாசன் மகன் பரகத்துல்லாஹ் (31) என்பவர் இதுகுறித்து ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அவரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பரகத்துல்லாஹ் அளித்த புகாரின் பேரில் குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையற்கரசி வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று சாதி, மதக் கலவரங்கள தூண்டும் வகையில் வன்முறையான செய்திகளையோ, புகைப்படங்களையோ மற்றும் வீடியோக்களையோ சமூக வலைதளங்களில் யாராவது பதிவிட்டு பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


