செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு தாமிரபரணிக்குச் சிறப்புப் பூஜை நடந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா நடந்தது. அதன் பின் ஒவ்வொரு வருடமும் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் வருடந்தோறும் புஷ்கர தினவிழா நடந்து வருகிறது. தொடர்ந்து இந்த ஆண்டும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு புஷ்கர தினவிழா மற்றும் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி முத்தாலங்குறிச்சி நல்லாண் பிள்ளை பெற்ற குணவதி அம்மன் கோயில் நடை திறக்கப்பட்டது. அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. அதன் பின் கும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தாமிரபரணிக்கு 21 வகை அபிஷேகம் நடந்தது. அதன் பின் தீபாதரனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முத்தாலங்குறிச்சி பக்த பேரவையைச் சேர்ந்த லெட்சுமணன், முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி சக்தி விக்னேஷ், தெற்கு காரசேரி கிராம நிர்வாக அதிகாரி கந்த சுப்பு, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தலையாரி பாலகிருஷ்ணன், வள்ளி, கனி, முருகன் உள்படப் பலர் கலந்துகொண்டனர். பூஜைகளைக் கோயில் அர்ச்சகர்கள் சுந்தர கம்பர், சேகர் கம்பர் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அண்ணாமலை மற்றும் செந்தில் குடும்பத்தினர் செய்திருந்தனர்.


