தருவையில் உள்ள தெய்வங்களில் அச்சம் தீர்த்தார் ஆலி சாஸ்தா வரலாறு பேசப்படவேண்டிய வரலாறு. இந்த வரலாறு குறித்து தெரிந்து கொள்வதற்காக நாம் அக்கோயில் பூசாரி வெங்கடேஷ்வரன் அவர்களை சந்தித்தோம்.
இந்தகோயிலுக்கு 7 தலை முறையாக தாத்தா வெங்கடேஷ்வர வேளாளர் குடும்பத்தினரே இந்த கோயிலுக்கு பூஜை வைப்பார்கள். சுப்பிரமணியன் என்ற முருகன் என்பவர் இவரது தந்தை. தற்போது வெங்கடேஷ்வரன் இந்த கோயிலுக்கு பூஜை வைக்கிறார். இவரிடம் தான் கோயில் வரலாறு குறித்து கேட்டறிந்தோம்.
ஒரு காலத்தில் தருவை கிராமம் மிகப்பெரிய காடாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட முன்னீர் பள்ளத்தினை தாண்டி, பிராஞ்சேரி வரை காடாகத்தான் இருந்ததுள்ளது. இந்த பகுதியில் இருந்து வயல்வெளிக்கு செல்பவர்களுக்கு கூட பாதுகாப்பு கிடையாது. வயல்வெளிகளில் வேலைக்கு செல்பவர்களுக்கு விஷ சந்துகளால் பல பிரச்சனை ஏற்பட்டுவிடும். அதோடு மட்டுமல்லாமல் காட்டுக்குள் திருடன் பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த வழியாக பொருள்களை கொண்டு செல்லும் விவசாயிகளிடம் பொருளை அபகரித்துச்சென்று விடுவார்கள். இதனால் விவசாயிகள் அச்சத்தோடே இந்த பகுதியில் வாழ்ந்து வந்தனர். இந்த பிரச்சனை எல்லாம் தீர அய்யனார் முன்பு நின்று , “அய்யா எங்கள் அச்சத்தினை தீர்க்க வேண்டும்”. என்று வேண்டி நிற்பார்கள். இவர்களுக்கு சாஸ்தா வேண்டிய அருள் வழங்கியுள்ளது. ஒரு சமயம் விவசாயிகளிடம் திருட வந்த திருடர்களை குருடர்கள் ஆக்கி திருட்டை தடுத்துள்ளார் சாஸ்தா. அதுபோலவே விவசாய நிலங்களில் விஷ சந்துகள் இவர்களுக்கு தீங்கு செய்ய வில்லை.
சாஸ்தாவை வணங்கி செல்வதால் அச்சம் தீர்ந்து நல்வழி அடைகிறார்கள் என்பது பக்தர்களுக்கு புரிந்தது. அதன் பின் அவர்கள் திருட்டு பயம் இன்றி, விஷ சந்துகள் பயமின்றி விவசாய பணிகளை மேற்க்கொண்டாடர்கள். பாமரர்கள் மற்றும் விவசாயிகளின் அச்சத்தினை தீர்க்கும் அய்யனார் “அச்சம் தீர்த்த அய்யனார்” என்றழைக் கப்படுகிறார். அவர் அருகில் மிகப்பிரமாண்டமான ஆலி இருப்பதால் “அச்சம் தீர்த்தார் ஆலி சாஸ்தா” என இவர் வழங்கப்படுகிறது. கல்வெட்டுகளிலும் இவ்வாறே குறிக்கப்பட்டுள்ளார்.
இவர் திருமண கோலத்தில் பூர்ண புஷ்கலாவுடன் அமர்ந்த கோலத்துடன் இந்தகோயில் மூலஸ்தானத்தில் உள்ளார். சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு வேண்டும் அருளை அருளும் வண்ணம் அய்யனார் உள்ளார். சந்தோஷத்தில் உள்ள இருக்கும் சாஸ்தா வருவோருக்கு அருளை வாரி வழங்கி வருகிறார். எனவே தான் வருடத்துக்கு வருடம் சாஸ்தாவை வணங்குவோர் எண்ணிக்கை பெருகி கொண்டே இருக்கிறது.
தருவையை பொறுத்தவரை மற்ற கோயில்களில் என்ன திருவிழா நடந்தாலும், சாஸ்தா கோயிலில் முதல் பூஜை செய்து விட்டுத்தான் மற்ற கோயிலுக்கு பூஜை மற்றும் கொடைவிழா நடைபெறும். எனவே இந்த ஊரின் ஆதிக்கோயிலாகவே இந்த சாஸ்தா விளங்குகிறார்.
அச்சம் தீர்த்தார் ஆழி சாஸ்தா கோயில் அருகே ஆழி உள்ளது.
இந்த ஆழியை பற்றி இவ்வூரில் செவிவழியாக பேசப்படும் கதை ஒன்று உள்ளது. ஒரு சமயம் இந்த பகுதியில் சாஸ்தாவை கடந்து விவசாயி ஒருவர் சென்றுள்ளார். அவர் சாஸ்தா அருகில் உள்ள ஆழியை பார்த்து வியந்துள்ளார். “யப்பா இவருக்கு எவ்வளவு பெரிய வயிறு” என்று கேலி செய்துள்ளார். இவர் வயலுக்கு சென்று வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே வயிற்று வலி வந்து விட்டது. உடனே இவரை அருகில் உள்ள மருத்துவச்சியிடம் சென்று காட்டினர். அவர் மருத்துவம் செய்யும் போது, “ஆழியை பார்த்து கேலி செய்தாயா?”. என கேட்டார். “ஆமாம்” என்றார் விவசாயி. “அந்த ஆழித்தான் உனக்கு வயிற்று வலியை ஏற்படுத்தியுள்ளார். எனவே நீ அவர் சன்னதியில் போய் அவரை வேண்டி நில். உன் வயிற்று வலி தீர்ந்து விடும்” என்று கூறினார்.
உடனே அந்த விவசாயி ஆழியை வணங்கி பொங்கலிட்டு வயிற்று வலி நீங்கி வாழ்ந்தார். அதன் பின் வயிற்று வலி ஏற்பட்டால் இந்த சாமியை வணங்கி நின்று வருகின்றனர்.
இந்த கோயிலில் மனநோய் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர வேண்டும் என்றால் கடைசி சனி கிழமை தோறும் அய்யனுக்கு தேங்காய் மாலை சாத்தி வழிப்படுகிறார்கள். 11 சனிக்கிழமை இதுபோன்று வழிப்பட்டால் நோய் தீர்க்கிறது. மனநோய் மட்டுமல்ல வேண்டும் கேட்ட வரம் கிடைக்க இதுபோன்ற வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த கோயிலில் பௌர்ணமி பூஜையும் மிகச்சிறப்பாக நடைபெறம். அந்த நாளில் பெண்கள் விளக்கு பூஜை நடத்துக்கிறார்கள். சாதாரணமாக 18 விளக்குக்குகள் குறையாமல் இங்கே பக்தர்கள் வந்து விளக்கு பூஜை செய்து வருகிறார்கள்.
பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு முதல் நாள் மாக்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மறு நாள் அதிகாலை அபிசேகம் அலங்காரம் நடந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அன்று முழுவதும் அன்னதானம் நடைபெறும். அதன்பின் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த சமயத்தில் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.
இந்த கோயிலில் சென்னையில் வசித்து வரும் முன்னாள் தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, கத்தாரில் வசித்து வரும் லெட்சுமி நாராயணன், கோயம்புத்தூர் தீனதளாளன், பத்தவத்சலம் உள்பட பல வி.ஐ.பிகள் வெளியூரில் இருந்து இக்கோயிலில் தரிசனம் செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த சாஸ்தாவை குல தெய்வமாக கொண்டவர்கள் பங்குனி உத்திரம் அன்று ஆயிரங்கணக்கில் கூடுவர். வீடுகளில் முக்கிய நிகழ்ச்சி வந்தால், இங்கே வந்து பொங்கலிட்டு சாஸ்தாவுக்கு அர்ச்சனை செய்து அதன் பின்னே நிகழ்ச்சிகளை துவங்குகிறார்கள்.
இந்த கோயிலில் முகப்பு மண்டபம் திறப்பு விழா குறித்த கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்த கல்வெட்டு 14.09.1997ல் அடிக்கல் நாட்டப்பட்டு 6.03.1998 இல் திறக்கப்பட்டது. இந்த கட்டித்தினை திருநெல்வேலி டவுண் சுடலை மாடன் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் செட்டியார் குடும்பத்தினர் கட்டிக் கொடுத்தனர். கட்டிட ஒப்பந்த காரராக பாளையங்கோட்டை செந்தில் நகர் முருகன் என்பவர் பணி புரிந்துள்ளார்.
இந்த கோயில் கும்பாபிசேக நடந்த கல்வெட்டு ஒன்றுள்ளது. இந்த கல்வெட்டில் ஸ்ரீபூரண புஷ்கலா அம்பிகா சமேத அருள்மிகு அச்சம் தீர்த்தார் சாஸ்தா மகா கும்பாபிசேகம் 24.06.2010 அன்று நடந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் பிருதி வருசம் ஆனிமாதம் 10 ஆம்தேதி அனுஷம் நட்சத்திரம் வியாழக்கிழமை காலை 9.40 லிருந்து 10.40க்குள் நடந்தது. கும்பாபிசேகம் மற்றும் திருப்பணிகள் உபயதாரர் லெட்சுமி நாராயணன், பெங்களூர் சாய் குமார், சேலம் பழனிகுமார், கோவை பாலமுருகன், கோவை பக்தவச்சலம் சண்முகம் ஆகியோர் செயல்பட்டனர். அந்த சமயத்தில் பூசாரி ராமகிருஷ்ணன் என்றும் செயலர் முத்துக்குட்டி என்று கல்வெட்டு தகவல்கள் கூறுகிறது.
இந்த ஆயலத்தில் தினமும் 8 முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் நடைதிறந்து இருக்கும்.
தருவை மெயின்ரோடு பஸ் நிலையத்தில் இருந்து 1 பர்லாங் தொலைவில் ஊருக்குள் செல்லும் வழியில் இந்த ஆலயம் உள்ளது.
கோயில் நிர்வாகம் மற்றும் பூஜைகளை பெங்களூர் லெட்சுமிநாராயனண் ஷோபா குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.
தருவை இசக்கியம்மன்.
தருவை பஸ் நிலையம் அருகில் மெயின்ரோட்டில் சேரன்மகாதேவி செல்லும் சாலையில் இடது பரம் கான்சாகிப் சுடலை கோயில் அருகில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் மிகவும் விசேஷமானவள். இந்த கோயிலை பற்றி அறிய பூசாரி கந்தசாமி அவர்களை சந்தித்தேன். அவர் என்னிடம் கோயில் பற்றி கூறிய தகவல்களை உங்களுக்குத் தருகிறேன்.
முப்பந்தல் இசக்கி பிள்ளைமார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டவள் என்றாலும் கூட, அனைத்து சமுதாய மக்களும் இங்கே வந்து வணங்கி வளம் பெறுகிறார்கள்.

இந்த ஆலயத்தில் மூன்று வகையான இசக்கிகள் உள்ளார்கள். இதில் ஒருவர் பேசும் இசக்கி , ஒருவர் ஊமை இசக்கி மற்றும் ஒருவர் முப்பந்தல் இசக்கி என போற்றப்படுகிறார்கள்.
ஆரல்வாய் மொழியில் உள்ள முப்பந்தல் இசக்கியைத் தான் இங்கே பிடிமண் எடுத்து போட்டு வணங்கி வருகிறார்கள். இந்த கோயிலில் ஆடி மாதம் கடைசி செவ்வாய் கிழமை அன்று கோயில் கொடை விழா நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு முதல் நாள் மாலை 3 மணி அளவில் தருவை தாமிரபரணி ஆற்றில் உள்ள அக்னி தீர்த்தத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள். அதன் பின் அபிசேகம் அலங்காரம் நடைபெறும். செவ்வாய் கிழமை காலையில் 7 மணிக்கு தருவை பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர் சுற்றி கோயிலுக்கு ஊர்வலமாக வருவார்கள். அதன் பின் மதியம் கோயில் கொடை விழா நடைபெறும். தொடர்ந்து வில்லு பாட்டு நடைபெறும். இந்த கோயிலை பெறுத்தவரை பிள்ளை வரம் தரும் தெய்வம். எனவே தான் தொட்டில் கட்டி போடுபவர்களும், சுழவு மற்றும் பொம்மை செய்து நேர்ச்சை வழங்குபவர்கள் மிக அதிகமாக இங்கே காணப்படுவார்கள்.
இதனால் தான் கோயில் எதிரே உள்ள ஆலமரத்தில் மிக அதிகமான நேர்ச்சை தொட்டில்கள் காணப்படுகிறது. அதன்பின் இரவு சாமக்கொடை நடைபெறும். இந்த சமாக்கொடையில் சாமியாடிகள் பக்தர்களுக்கு வரம் கொடுக்கும் நிகழ்ச்சி மிகப்பிரமாண்டமாக நடைபெறும். இந்த கோயில் கொடையில் வளையல் போடும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. குழந்தை வேண்டும் பெண்கள் இங்கே நேர்ச்சை செய்வார்கள்.
இந்த ஆலயத்தில் 11 செவ்வாய் கிழமை நெய் விளக்கு போட்டு இசக்கி அம்மனை வணங்கி நின்றால் வேண்டும் வரம் கிடைக்கும். எனவே இதற்காக பக்தர்கள் செவ்வாய் கிழமை தோறும் நெய் விளக்கு போட்டு வணங்கி வருகிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் 5 மணி முதல் 8மணி வரை திறக்கப்படும். இந்த கோயிலில் முன்னோரு காலத்தில் பூசாரியாக இருந்த தற்போதுள்ள பூசாரியின் ஆச்சி, பாப்பம்மாள் குறிச் சொல்லி வந்தார். அவர் குறி பலித்த காரணத்தினால் ஒவ்வொரு நாளும் அவர் வாக்கை கேட்க பக்தர்கள் குவிந்தனர்.
இசக்கியா பிள்ளை வழியில் தற்போது மூன்றாம் தலை முறையாக இக்கோயிலுக்கு பூஜை செய்து வருகிறார் கந்தசாமி.
இந்த ஆலயத்துக்கு கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், அமெரிக்கா,சென்னை, திருப்பூர், மதுரை உள்பட பல இடங்களிலில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தற்போது இந்த கோயிலில் முருகன்என்பவர் வெள்ளிக்கிழமை தோறும் குறிச்சொல்லி வருகிறார்.
தருவை உய்க்காட்டு சுடலை
தருவையில் உள்ள உய்க்காட்டு சுடலைபற்றி அறிந்து கொள்ள நாங்கள் தொடர்ப்பு கொண்டவர் வல்லப பாண்டியன் என்ற குமார். இவர் எங்களுக்கு தருவை குறித்து செய்திகள் சேகரிக்க வேண்டிய உதவிகளை செய்ததோடு தருவை உய்க்காட்டு சுடலை குறித்தும் பேசினார். இந்த கோயில் அவருடைய பூர்விக கோயில்.
உய்க்காட்டு சுடலை இங்கே 21 பூடம்போட்டு வணங்கப்படுகிறார். பாளையங்கால்வாய் இடது கரையில், மந்திரியம்மன் கோயிலுக்கு எதிர்கரையில் இந்த சுடலை கோயில் உள்ளார். இந்த கோயிலுக்கு உக்கிரன் கோட்டையில் இருந்து சிவனுதேவர் என்ற இவரது மூதாதையர் கொண்டு வந்துள்ளனர். ஆரம்பத்தில் சுடலையும் பேச்சியம்மனும் தான் நிலையம் கேட்டு வணங்கி வந்தனர். அதன் பின் 21 பூடமாக மாறி விட்டது.
இவர்களது முன்னோர்கள் செம்பியநாட்டு மறவர். அந்த காலத்தில் பாண்டியனின் துறைமுகம் சோழ மன்னர் வசம் இருந்தது. ராஜரா-ஜ சோழனின் தந்தை சுந்தரசோழன் காலத்தில் பட்டத்து ராணியாக இருந்தவர் செம்பிய நாட்டு மறவர். எனவே எங்கள் மக்கள் அவருக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தார்கள். தென் பகுதியில் பாண்டிய மன்னரின் ஆட்சிக்கு கீழ் இருந்த இடத்தினை காவல் காக்க எங்கள் மக்களை பல குழுக்களாக தென் பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். நாங்கள் உக்கிரன் கோட்டையை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தோம். யானைப்படையை நிர்வாகிக்கும் பொறுப்பு எங்களிடம் இருந்தது. எனவே தான் எங்களது சாஸ்தா வேழமுடையார் சாஸ்தா என்றழைக்கப்பட்டார். நாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் உய்க்காட்டு சுடலையை கொண்டு சென்றோம். ஒரு காலத்தில் சிறந்த துறைமுகமான கொற்கை சீரும் சிறப்புமாக பொன் பொருளுடன் இருந்துள்ளது. இதனால் சேர மன்னர்கள் மலையாள நாட்டில் இருந்து வந்து கொற்கையை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவர்களை தடுத்து சோழ மன்னரின் அரணாக இருந்தவர்கள் இந்த செம்பிய நாட்டு மறவர்கள். இவர்கள் தருவை போன்ற ஊர்களில் இருந்து கொண்டு சேர படை கொற்கையை படையெடுத்து வரும் போது தடுத்து விரட்டியுள்ளனர்.
வல்லபபாண்டியன் என்ற குமார் இந்த கோயிலை பற்றி என்னிடம் கூறியதை தொகுத்து தருகிறேன். நாங்கள் உய்க்காடு ஜமீன்தாரின் உறவுகாரர்கள். எனவே தான் நாங்கள் செல்லும் இடமெல்லாம் எங்களது குல தெய்வமான ஊர்க்காட்டு சுடலையை எங்கள் காவல் தெய்வமாக கொண்டு செல்கிறோம்.
எங்களை போன்ற மற்றொரு காவலர்கள் இந்த பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் சிறுதாலி கட்டிய மறவர்கள் என அழைக்கப்படும் சிங்கம்பட்டி வகையறாக்கள். அவர்களும் கோபால சமுத்திரம் உள்பட பல பகுதியில் வசித்து வருகிறார்கள்.
உய்க்காட்டு சுடலைக்கு சித்திரை மாதம் கொடைவிழா நடைபெறுகிறது. இந்த கோயிலுக்கு 350 வரி உள்ளனர். வல்லபபாண்டியன் என்ற குமார் தன்னுடைய முன்னோர்கள் 6 தலை முறை பெயரை நம்மிடம் குறிப்பிடுகிறார். ராமுதேவர், சுப்புதேவர், சிவனுதேவர் , வாலவல்லபபாண்டிய தேவர், வீரபாண்டிய தேவர், வல்லபபாண்டியன் என்ற குமார் தேவர். என பட்டியலிடுகிறார்கள்.
வல்லப பாண்டியன் என்ற குமார் அம்பையில் உள்ள தீர்த்தபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளார். தற்போது உள்ளூரில் விவசாயம் மற்றும் பைனான்ஸ்தொழில் செய்து வருகிறார்.
கோயில் கொடை விழா சிறப்பு குறித்து அவர் கூறும் போது, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் அக்னி தீர்த்த கரையில் உள்ள மண்டபத்தில் இருந்து தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்படும். அதற்கு முன்பு உக்கிரன் கோட்டையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அக்னி தீர்த்தத்தில் வைத்து இரண்டு தீர்த்தமும் ஒன்றாக்கப்படும். அதன் பின் தீர்த்தம் ஊர்வலமாக ஆலயத்துக்குகொண்டு வரப்படும்.
வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு சிவனைந்த பெருமாளுக்கு கிடா வெட்டு நடைபெறும். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு நடைபெறும் கோயில் கொடை விழாவில் கனியான் கைவெட்டு நடைபெறும். அதன் பின் சுவாமிகள் ஆடி அருள்வாக்கு கூறுவார்கள்.
இரவு 8 மணி முதல் 9 மணி வரை அலங்கார பூஜை மிகச்சிறப்பாக நடைபெறும். நடுசாமம் 12 மணிக்கு சாமியாடிகள் வேட்டைக்கு போகும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக வடக்கே உள்ள சுடுகாட்டுக்கு சாமி வேட்டைக்கு செல்வார். அதன் பின் மேற்கே வரிந்து பாறை வரைக்கு சென்று அதன் பின் அங்கிருந்து திரும்பி வந்து மக்களுக்கு அருள் வாக்கு கூறுவார்.
அன்று கிடாவெட்டு நடைபெறும். மறுநாள் படைப்பு எடுப்பார்கள்.
தற்போது இந்த கோயிலை பிடிமண் எடுத்து வந்து தருவை மாரியம்மன் கோயில் அருகில் பூடம் போட்டு வணங்கி வருகிறார்கள். இந்த கோயில் அருகே மாட்டு மந்தை இருப்பதால், மந்தை கோயில் என்றும் அழைக்கிறார்கள்.
என்று அவர் கூறினார்.
தொடர்ந்து தருவையில் உள்ள மற்றொரு தெய்வம் குறித்து நாம் காணலாம்.
( நதி வற்றாமல் ஓடும்)


