பலவேச முத்து அய்யா அலுவலகம் இருந்த இடம் அஹ்மதி என்றழைக்கப்படுகிறது. நாம் ஏற்கனவே எண்ணெய் குறித்து பார்த்த அருங்காட்சியகத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இங்கு வேலை செய்யும் அன்பர்கள் அனைவருமே தமிழர்கள் என்ற தகவலை அறிந்தேன். மிகவும் சந்தோசமாக இருந்தது.
தங்கப் பனை கம்பேனி உலகத்தில் பல்வேறு நாடுகளுடன் தொடர்ப்பு கொண்ட கம்பேனியாக உள்ளது.
சிறிது நேரத்தில் பலவேசமுத்து அய்யா தனது அறைக்கு வந்தார். உடன் அவரது நண்பர் கிருஷ்ண குமார் அவர்களும் வந்தார்கள். இவரும் எங்களிடம் அவர்கள் கம்பேனி குறித்தும், அவர்களுக்கு கிடைத்த அபூர்வ பரிசுகள் பற்றியும் பேசினோம்.
பலவேசமுத்து அய்யா முனைவர் சுதாகரின் வகுப்புத் தோழர். இருவரும் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒன்றாக வேதியியல் பட்டப் படிப்பை முடித்தார்கள். தற்போது குவைத்தில் பெரும் தொழிலதிபராக பலவேசமுத்து அய்யா உள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கு அருகே உள்ள சிங்காரத்தோப்பு கிராமத்தைச் சார்ந்தவர்.
தமிழ்நாடு குவைத் பொறியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணன் ஜகனும் ஒரு பொறியாளர் மற்றும் தொழிலதி பர்தான். இவர் தமிழ்நாடு குவைத் பொறியாளர் சங்க தலைவராக உள்ளார். இவர் நாகர்கோவில் ஆசாரிப் பள்ளத்தினை பூர்வீகமாகக் கொண்டவர். இவரும் குடும்பத்துடன் குவைத்தில் வசித்து வருகிறார்.
கிருஷ்ண குமாரும் ஒரு தொழில் அதிபர்தான். இவர் விருதுநகர்காரர். இவர் பார்பிக்யூ (Barbeque) செய்ய வசதியாகப் பலவகையான எண்ணெய் வகைகளைத் தயாரிக்கிறார். பார்க்பிக்யூ என்பது சுடப்பட்ட உணவு என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் வகைகளைச் சுத்தமான காற்றுடன் பக்குவமாக அதிக அழுத்தத்தில் ஒரு குடுவையில் அடைக் கிறார்கள். இதனைக் கொண்டு வெந்து கொண்டிருக்கும் இறைச்சி வகைகளின் மேல் இந்த எண்ணெய்யை எளிதில் தெளிக்கலாம். இதனால் மிகவும் சுவையான பார்பிக்யூ தயாரிக்க முடியும். மேலும் இந்த முறையில் சுவையான எண்ணெய்யை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் வைத்துக் கொள்ளலாம். பார்பிக்யூவின் சுவையும் கூடும்.
இந்த வகை எண்ணைத் தயாரிப்பு ஒரு புது தொழில் நுட்பம். கிருஷ்ண குமார் விருதுநகரில் இந்தத் தொழில் சாலையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். குவைத்திலும் இவர் தொழில் செய்து வருகின்றனர்.
என்ற தகவலை தெரிந்துகொண்டோம்.
இந்த நாட்டில் சுமார் 10 லட்சம் குவைத்தியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் அரேபியர்கள். ஆச்சரியம் என்னவென்றால் இங்கு இவர்களுக்கு இணையாக 10 லட்சம் இந்தியர்களும் வாழ்கின்றனர். குவைத்தில் வாழும் இந்தியர்களில் தமிழர்களே அதிகம் என்பது நமக்கு கூடுதல் செய்தி. மகிழ்ச்சியான செய்தி.
குவைத்தியர்களோடு சேர்ந்து தமிழர்கள் தொழில் செய்கின்றனர். இந்தக் கூட்டுத் தொழிலில் குவைத்தியர்களுக்கு 51 விழுக்காட்டுப் பங்கும், தமிழர்கள் கைவசம் 49 விழுக்காட்டுப் பங்கும் உள்ளது. .
தமிழர்களுக்கு அரேபியர்களான குவைத் மக்களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது.
எங்களுக்கு தேவையான டீ கொண்டு தரப்பட்டது. மிக சுவையாக அருந்தி கொண்டே பேசிக்கொண்டிருந்தோம்.
முனைவர் சுதாகரிடம், “நாளை இரவு ஒரு விருந்துக்கு ஏற்பாடு நடக்கிறது. உனக்கு என்ன விருந்து வேண்டும்?” எனப் பலவேசமுத்து கேட்டார்.
முனைவர் சுதாகருக்கு ஒன்றுமே புரியவில்லை.
தமிழ்நாடாக இருந்தால் இட்லியா? தோசையா? இடியாப்பமா? இத்துடன் ஆடா? கோழியா? இப்படி எதாவது சொல்லலாம்.
குவைத் உணவு வகைகள் அவருக்குத் தெரியவில்லை.
எனவே “என்ன சொல்ல எனத் தெரியவில்லையே” என்றார்.
இதனை உணர்ந்த பலவேசமுத்து, “டேய் ஆடா, ஒட்டகமா?” என்று நெல்¬ல் பாஷையில் கேட்டார்.
அதிர்ந்தோம். ஒட்டகமா?
“என்ன வேண்டும்?”. மீண்டும் கேட்டார்.
சுதாகர் யோசித்தார். எனக்கு இது எல்லாமே புது அனுபவமாக இருந்தது. சுதாகர் அய்யா கூட இதற்கு முன்பு ஒரு முறை குவைத் வந்திருக்கிறார். எனக்கு இது முதல் தடவை அதனால் என்ன சொல்ல என தெரியாமல் அமைதியாக இருந்து விட்டேன் . முனைவர் சுதாகர் அவர்கள்தான் ஆர்வத்துடன் இதைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார்.
“ஏதாவது ஒன்றைச் சொல்” என்று தனது கல்லூரி தோழரிடம் கேட்டார் பலவேசமுத்து அய்யா.
ஒட்டக உணவு இயற்கனவே சாப்பிட்டு இருப்பார் போல, மீண்டும் வேண்டாம் என நினைத்திருப்பார் போல, குவைத் ஆட்டு இறைச்சி சாப்பிடலாமென நினைத்திருப்பார் போல மு¬வைர் சுதாகர்.
எனவே “ஆடு போதும் ஒட்டகம் வேண்டாம்” எனக் கூறினார்.
“சரி வெள்ளிக்கிழமை ஆட்டு விருந்து” எனப் பலவேசமுத்து உறுதி செய்தார். கல்லூரித் தோழர்கள் இருவரும் நிறைய பேசிக்கொண்டிருந்தார்கள்.
இந்த நேரத்தில் பலவேச முத்து அவர்களை பற்றி நான் அறிந்து கொண்ட விவரத்தினை பதிவிடலாம் என நினைக்கிறேன்.
பொறியாளர் பலவேசமுத்து திருநெல்வேலி மாவட்டத்தின் வள்ளியூர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஆரம்ப பள்ளியை உள்ளூரிலேயே படித்தார். பணிக்க நாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் பள்ளியில் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப் படிப்பான வேதியியல் படித்தார். அதன் பின் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கல்லூரி படிப்பை முனைவர் சுதாகருடன் இயற்பியல் படித்துள்ளார்.
தொடர்ந்து மெட்ராஸ் தொழில் நுட்ப கல்லூரியில் பொறியாளர் படிப்பை முடித்து விட்டு குவைத் நாட்டுக்கு 1999 ஆம் வருகை புரிந்துள்ளார்.
இங்கு வந்தவர் 2010 ல் தங்கப்பனை கம்பேனியை ஆரம்பித்துள்ளார். அதன் பின் இங்கிருந்து பல நாடுகளுக்கு தான் உற்பத்தி செய்த பொருள்களை அனுப்பிவைக்கிறார். இங்கு சுமார் 50 பேர் வேலை செய்கிறார்கள். அனைவருமே தமிழர்கள்தான் என்பது நமக்கு பெருமை. இவருடைய துணைவியார் லலிதா அவர்கள் முதலீட்டு வணிக நிபுணர். நாளை மறுநாள் குவைத்தில் நடைபெறும் மகளிருக்கான நிகழ்ச்சியில் எங்களோடு அவரும் உரையாற்ற இருக்கிறார்.
இவருக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். இவர்களுடன் குவைத்தில் குடியிருந்து வருகிறார். நாங்கள் தற்போது தங்கியிருக்கும் பகுதியின் அருகில் தான் இவர்களது வீடு உள்ளது.
நாங்கள் அங்கு பேசிக்கொண்டிருக்கும்போதே பொறியாளர் அசோக் அலை பேசியில் தொடர்பு கொண்டார்.
“சார் மதிய சாப்பாடு நேரம் வந்துவிட்டது. என்ன சாப்பிடுகிறீர்கள்?” எனக் கேட்டார்.
முனைவர் சுதாகர், “இந்தியச் சாப்பாடு வேண்டாம்.? ஆண்டு முழுவதும் தமிழகத்தில் இதைத்தான் சாப்பிடுகிறோம். எனவே வேறு ஏதாவது முயற்சி செய்யலாமே” என்றார்.
“சரி. சாமுவேலும் சுப்பிரமணியனும் உங்களை மதியச் சாப்பாட்டிற்கு அழைத்துச் செல்லுவார்கள்” என்றார் பொறியாளர் அசோக்.
பலவேச முத்து அய்யாவிடமும், கிருஷ்ணகுமார் அய்யாவிடமும் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். சாமுவேல் எங்களை அழைத்துக்கொண்டு கிளம்பினார். எங்களை எதிர்பார்த்து தமிழ்நாடு குவைத் பொறியாளர் சங்க பொருளாளர் சுப்பிரமணியம் காத்திருந்தார்.
சாமுவேல் மற்றும் சுப்பிரமணியனிடம் “மதியம் குவைத் உள்ளூர் மக்கள் சாப்பிடும் சாப்பாடு எதாவது சாப்பிடலாமா?” என்று முனைவர் சுதாகர் கேட்டார்.
“சரி” என்று மெகபுல்லா என்ற இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றனர்.
அங்கு மைஸ் அல்காணி (விகிணிஞீ கிலிபிகிழிமிவி) என்ற அரேபியன் ஓட்டலுக்குச் சென்றோம். இந்த ஓட்டல் லெபனான் நாட்டினர் ஒருவர்தான் நடத்துகிறார்.
மிகப்பிரமாண்டமாக இருந்தது. இந்த பகுதியில் எல்லா இடமுமே மிகப்பிரமாண்டாக இருந்தது. ஓங்கி வளர்ந்த பில்டிங். சுத்தமான சாலை. ஹோட்டல் உள்ளே நுழைந்தோம். மிகப்பிரமாண்டாக இருந்தது. எங்கும் சாக்கடை பார்க்க முடியவில்லை. சென்னையை போல உயர்ந்து நின்ற மாடிக்கு அடியில் குடிசையை பார்க்க முடியவில்லை. நமது இந்தியா இதுபோல மாறும் நாள் எப்போது வருமோ என என்னை கனவு காண வைத்தது. எங்கு பார்த்தாலும் அழகாய் இருந்தது.
உள்ளே நுழைந்தோம். அரண்மனைபோலவே இருந்தது. உள்ளே அரபு காரர்கள் அதிகமானவர்கள் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
நாங்கள் ஒரு டேபிளில் சுற்றி அமர்ந்தோம். சர்வர் வந்தார். மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி உணவு வகைகளை ஆடர் செய்தார்கள்.
சுதாகர் உணவு வகைகளை ரசித்து , அதைப்பற்றி வரலாறுகளை கேட்டறிந்து ஆடர் கொடுக்க உதவியாக இருந்தார். முதல் முதலில் சில ரொட்டி வகைகளை கொண்டு வந்தனர். அதன் பின் மீன், கோழி, ஆட்டிறைச்சி வகைகள் வகைவகையாக கொண்டு வந்து வைத்தார். அதில் கீரையும் இருந்தது. 1952 இல் இருந்தே அரபியனின் பராம்பரியமான இந்த ஹோட்டல் இருக்கிறது. அரபி உணவு மிகவும் விசேஷமாக இங்கு கிடைக்கிறது. சமையல் செய்வதற்கான பொருள்கள் எல்லாம் எகிப்தில் இருந்து வருகிறது. தற்போது குவைத்தில் காய்கறி விளைகிறது. அதைக்கொண்டு இங்கு உணவு தயாரிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் கப்பல் மூலம் காய்கறி உள்பட பொருள்கள் இங்கே கொண்டு வரப்பட்டு உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. வெஜ் சலைட் என அழைக்கப்படும் உணவு இங்கு சாப்பாட்டுடன் வழங்கப்பட்டது.
அத்துடன் கத்தரிக்காய் மசியல் ஒன்றையும் கொண்டு வந்தனர். கத்திரிக்காயின் தோலை நீக்கி நன்கு மசித்துப் பல சுவையில் தருகின்றனர். இந்த மாதிரியான உணவு வகைகள் சுதாகர் அவர்களுக்கு முற்றிலும் புதிது. எனக்கோ இதைப்பற்றி அறிந்து இருக்கவே இல்லை. இதில் உப்பு சற்று தூக்கலாகச் சாப்பிட மயனைஸ் போன்ற சுவையுடன் இருந்தது. என அவர் கூறினார். அந்த சுவையெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால் நன்கு சுவைத்து சாப்பிட்டேன்.
கபாப் போன்ற அரேபியன் உணவு அவருக்கு நன்கு பழக்கப் பட்டதுதானாம். இருந்தாலும் இன்றைய மதிய உணவு மொத்தத்தில் புதுமையாகவே இருந்தது. என சந்தோசமாக எங்களிடம் பகிர்ந்துகொண்டார்.
ரசித்து சுவைத்து சுமார் 1 மணி நேரம் அமர்ந்து சாப்பிட்டோம். அனைத்து உணவுகளையும் பகிர்ந்து சாப்பிட்டோம். அதன் பின் பில் வந்தது. கிட்டத்தட்ட இந்திய பணத்துக்கு 8500 ரூபாயாக இருந்தது. 36 குவைத் தினார். இதற்கான பணத்தினை வழங்கினர்.
நான்கு பேர் சாப்பிட்டதற்கு இவ்வளவு பணமா என நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் பொறியாளர் சுப்பிரமணியன் இங்கு இது எல்லாம் சகஜம் தான் என்றார்.
உள்ளே அமர்ந்து இருக்கும் போதே மீண்டும் முனைவர் சுதாகர் அவர்களுக்கு மீண்டும் அலை பேசியில் ஒரு அழைப்பு வந்தது.
“சார் நாளை நடக்கும் டி.இ.எப் நிகழ்ச்சியில் நான் பங்கு கொள்ளலாமா?” என மீண்டும் ஒரு பெண் கேட்டார்.
“முடியாது” என முன்னர் கூறிய பதிலையே திருப்பவும் கூறினார் முனைவர் சுதாகர்.
தமிழ்நாடு குவைத் பொறியாளர் சங்க விழா குவைத்தில் மிக பிரபலமாகியுள்ளது. எனவே தான் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
இவ்வளவு வரவேற்பு இருக்கிறதே. கூடுதலாக மக்கள் வந்தால் சேர்த்துக்கொள்ள வேண்டியது தானே என கேட்டார் முனைவர் சுதாகர்.
அதற்கு பொறியாளர் சுப்பிரமணியன் சிரித்துக்கொண்டே சொன்னார். “நாங்கள் ஏற்கனவே இத்தனை பேருத்தான் வருவார்கள் என அதற்கு ஏற்றப்படியே ஹால் புக் செய்து விட்டோம். மேலும் அவர்களுக்கு உணவுகளையும் சேகரித்து வைக்க ஏற்பாடு செய்து விட்டோம். இங்கு பெண்கள் மட்டுமே வரவேண்டும். பெண்களே நடத்தும் விழா. அதோடு மட்டுமல்லாமல் சங்கத்தில் உள்ள ஆண்களில் சிலர் மட்டுமே உதவிக்கு வருவோம். மற்ற படி ஆண்களுக்கு அனுமதி இல்லை” என்று கூறினார்.
ஆகா. குவைத்தில் நாம் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சி மிகவும் விசேஷமாக இருக்கும் போல என நினைத்துக் கொண்டேன்.
மதிய உணவுக்குப் பின்னர் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்துவிட்டோம்.
எங்கள் இருவரையும் வழியனுப்பி விட்டு சுப்பிரணியனும், சாமுவேலும் சென்று விட்டார்கள்.
நாங்கள் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என நினைத்து ஓய்வு எடுத்தோம்.
மாலை வேளையில் நாளை நடைபெறும் மிகப்பிரமாண்ட நிகழ்ச்சி நடக்கும் இடத்தினை பார்வையிட எங்களை அழைத்துச்செல்வதாக கூறினார்கள்.
பொயியாளர் அசோக் அவர்கள் கொடுத்த சிம் கார்டால் வாட்ஸ் அப் மூலமாகத் தமிழகத்தில் இருக்கும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க முடிந்தது. பின்னர் தூங்கி விட்டோம்.
(குவைத் பயணம் தொடரும்)


