தூத்துக்குடி மாநகராட்சி 58 வது வார்டுக்கு உட்பட்ட முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியில் உள்ள குளத்தை முழுமையாகத் தூர்வாரிப் பராமரிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சி 58 வது வார்டுக்கு உட்பட்ட முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியில் உள்ள இக் குளமானது பல ஆண்டுகளாகச் சரியாகத் தூர்வாரிப் பராமரிக்கப்படாததால், குளத்தைச் சுற்றி சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவற்றுடன், குளத்தில் உப்பளக் கழிவுநீர் மற்றும் வாறுகால் கழிவுநீர் ஆகியவை தொடர்ந்து கலக்கப்படுவதால் பொதுமக்கள் எவரும் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இக் குளம் உள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் இக் குளத்தை முழுமையாகத் தூர்வாரிச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும்; குளத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் மற்றும் நடைமேடை அமைத்துப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி மேயர் பி. ஜெகன் பெரியசாமியிடமும் தனித்தனியே மனுக்கள் அளிக்கப்பட்டன.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி மேயர் பி. ஜெகன் பெரியசாமி, இக் குளப் பகுதியை விரைந்து ஆய்வு செய்து, தூர்வாரிப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந் நிகழ்வின் போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெநேசமணி, மாவட்ட துணைச் செயலாளர் மாரிச்செல்வம் மற்றும் ராஜீவ் நகர் கிளை உறுப்பினர் காசிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


