தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய ஆவின் பாலகத் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3-வது மைல், அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வுச் சங்கத்தின் சார்பில் ‘ஆவின் பாலகம் – ப்ரண்ட்ஸ் காபி கபே’ தொடங்கப்பட்டது. இவ் விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ரிப்பன் வெட்டிப் புதிய ஆவின் பாலகத்தைத் திறந்து வைத்தார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் ஆவின் பொருட்களின் முதற்கட்ட விற்பனையைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வின் தொடக்கமாக இருதய நண்பர்கள் அமைப்பின் சார்பில் சிறப்பு ஜெபம் நடத்தப்பட்டது. இப் பாலகம் பொதுமக்களுக்குத் தரமான அனைத்து ஆவின் பொருட்களும் தங்கு தடையின்றிக் கிடைக்கும் வகையில் செயல்படவுள்ளது.
இவ் விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், ஆல்கன் டிரஸ்ட் நிறுவனர் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட பிரதிநிதி நாராயணன், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் மருதப்பெருமாள், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் செல்வகுமரன் பங்கேற்றனர். மேலும் வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மணி ஆல்பர்ட், சங்க நிர்வாகிகள், அறக்கட்டளை உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


