தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கிப் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
இக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்த 596 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும், மூத்த குடிமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில் அவர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 27 மனுக்களும், மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்து அவர்களிடம் இருந்து 36 மனுக்களும் என மொத்தம் 659 மனுக்கள் பெறப்பட்டன. இம் மனுக்களின் மீது உடனடியாகப் பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந் நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரமணன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


