வருகின்ற 19ம் தேதி நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று சாத்தான்குளம் பகுதியில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
கடந்த அதிமுக ஆட்சியில் தான் சாத்தான்குளம் தந்தை-&மகன் ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலை நடந்தது. மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது 13 அப்பாவிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஆதரவளித்து அவர்களுக்கு நீதி, நியாயம் வாங்கிக் கொடுத்தது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடந்த அதிமுக அரசு வலிகளைத் தான் தந்திருக்கிறார்கள். உயிர் பலி வாங்கி இருக்கிறார்கள். இதைத் தவிர அந்த ஆட்சி நமக்கு வேறு ஒன்றையும் செய்யவில்லை. மேலும் கடந்த அதிமுக அரசுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவே பயம். அதனால் தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அப்படியே வைத்திருந்தார்கள். தமிழக முதல்வராக ஸ்டாலின் வந்த பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என சாத்தான்குளத்தில் எம்பி கனிமொழி பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.