தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை உருக்கட்டையால் தாக்கிய நண்பரை போலீசார் கைது செய்தனர். மேலும், 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி கிருபைநகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 24). கார் டிரைவர். இவரது நண்பர்கள் சந்தோஷ் (21), சிவா (22), சங்கர் (21) ஆகியோர் ஒன்றாக சுற்றுவார்களாம். இவர்கள் மீது கடந்த ஆண்டு தாளமுத்து நகர் காவல் நிலைய பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தினேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து மது குடித்து உள்ளனர்.
குடிபோதையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து, தினேஷ் குமாரை உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ்குமார் கிருபைநகர் அருகே உள்ள பூங்கா பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தினேஷ்குமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை கைது ெசய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற நண்பர்கள் 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


