மனித குலத்தின் சரிபாதியான பெண்ணினம் அதன் மறுபாதியான ஆணினத்தால் சரிசமமாகக் கருதப்படாத அவலம் உலகளாவிய நிலையில் இன்றுவரை இருந்துவரும் உண்மை.
இதன் விளைவே உலகின் இன்றைய வளர்ச்சி நிலையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள் . இன்னும் பல நூறாண்டுகளுக்குப் பின்னர் இம்மனித இனம் அடையப் போகும் சமூகப் பொருளாதார ,அரசியல் மேம்பாட்டை இன்றைய காலகட்டத்திலேயே நாம் அடைந்திருக்க முடியும்.ஆனால்
ஆண்வழிச் சமூக மாற்றத்தால் ஏற்பட்ட பெண்ணினத்தின் சமூக மதிப்பீடு குறைந்து போனது.
இதன் போக்கு 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஓரளவு பெண்கல்வி,தொழில் வளர்ச்சி, புதிய நிறுவனங்கள், சமத்துவ விழிப்புணர்வு போன்றனவற்றால் மாற்றம் கண்டு வந்தாலுமே இன்றுவரை பெண்ணின் மீதான சமூகப் பார்வை சமத்துவமடையவில்லை என்பதே உண்மை.
இப்பார்வைமாற்றம் ,
ஒட்டுமொத்த உலகத்திலும் ஆணின் மீதான பார்வைக்கு இணையாக மாற வேண்டுமெனில் ஒவ்வொரு பெண்ணும்தான் உலகத்தின் மீதான தனது பார்வையை மாற்றியாக வேண்டும்.
தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்தால் தன்மீது பாய்ச்சப்படும் எவ்வித தரங்கெட்ட பார்வைகளையும் இயல்பாக மேற்கொள்ளும் திறனையும் மனோபாவங்களையும் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் பெண் குழந்தைகளின் வளர்ப்புமுறை ஆண்குழந்தைக்கு இணையானதாகவும் எதார்த்தமானதாகவும் பெற்றோரால் செயல்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் இதில் தனிக் கவனம் செலுத்துவதால் மட்டுமே இன்னும் சில வருடங்களிலாவது சமத்துவத்தை அடைய முடியும்.
பெண்களுக்கே உரியதென வகுத்தளிக்கப்பட்டிருந்த மொழிநடையை மாற்றி, அறிவுப் பூர்வமான பேச்சுமுறைகளை வளர்க்க விளைய வேண்டும்.
உலகில் எவ்வித அடிமைத்தனமும் தானாக விடுதலையைப் பெற்றுக் கொண்டதுமில்லை தொடர்ந்து நீடித்திருந்ததுமில்லை.
அடிமைப் படுத்தப்பட்டோர் தங்களுக்கான உரிமைகளை உணர்ந்து கொள்ள தொடங்கும் போதே அவர்களுக்கான சுதந்திரமும் ஏற்பட்டு
வளர்ச்சிப்பெற தொடங்கி விடும்.
பெண்கள்
தாங்களாகத்தான் இழந்துபோன தங்களது முதன்மையான வாழ்வியல் இடத்தை மிகச் சாதுரியமாக அறிவுப்போர் மூலம் அடைந்தாக வேண்டும். பெண் தனக்குள் உறங்கி கிடக்கும் விவேகத்தையும் தைரியத்தையும் தட்டியெழுப்பும் ஆயுதமாக கல்வியைப் பயன்படுத்தியாக வேண்டும்.
ஆண்களுக்கு இணையான வளர்ச்சி என்ற இலக்கைத் தகர்த்து அதற்கும் மேலான உயர்வைதான் தரிசனமாக்கி பால் சமத்துவத்தையும் அதன் வலிமையையும் உணர்த்த இருபாலரும் முனைந்து செயல்பட்டால் மட்டுமே, நம் சமூகம் உலகளாவிய இச்சமூகத்தின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க இயலும்.
பெண் எதனால் வீழ்த்தப்பட்டாளோ, தனது தனித்தன்மையை இழந்து அடிமை உணர்வேற்றப்பட்டாளோ அதிலிருந்து அவள் எழத்துணிந்தால் நிச்சயமாக சமத்துவம் முழுமையடையும்.
உரிமைகள் என்பது அதைப் பிடுங்கி கொண்டோரிடமிருந்து தானாகவே
கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் அமைதிக் காப்பது அறியாமையின் உச்சம்.தனிமனித உரிமைகள் என்றுமே வேறெவராலும் பறித்துக் கொள்ள முடியாத தன்மையுடையது.
உரிமைகள் ஒவ்வொருவருக்கும் உரிய ஆளுமையெனும் ஆடை. அதை
தனக்கான தனியுடடைமையென உணர்ந்து நமக்கு நாமாகவே உடுத்திக் கொள்வதே மிகச் சிறந்த செயலாகும். கையில் உரியதை வைத்துக் கொண்டே கண்களை மூடிக் கொண்டு இல்லாத ஒருவரிடம் கொடுக்கும்படி போராடிக் கொண்டிருக்கும் நிலமைக்குள் பெண்ணினம் இன்னும் இருந்துகொண்டிருக்கக் கூடாது .
பெண்ணின் சிந்தனைகளைச் சுத்திகரிக்கும் வளர்ப்பு முறையும் அவளுக்கான அறிவார்ந்த வாழ்க்கை முறையும் பிறந்தது முதலே அளிக்கப்படும் போது தான் பெண்ணே நீ ஒப்பற்றவள்…!!
பெண்ணினம் அடுக்களையிலிருந்து மெல்லமெல்ல வெளியேறி இன்று பிரபஞ்ச வெளியை தனது இயங்குதளமாக்கிக் கொண்டிருக்கிறது…!
அதாவது பெண் தனது இயற்கையான மரபியல் தன்மைக்குத் திரும்பிக் கொண்டுருக்கிறாள்.
அது நிறைவேறும் காலத் தொலைவை குறைக்கும் முயற்சியில் ஒவ்வொரு தனிமனிதனும் ஈடுபடும் போது தான் பெண்ணின் மீதான சமூகப்பார்வைகளும் மதிப்பீடுகளும் தானாகவே மாறி இதுவரை முயன்றும் எட்டிப் பிடிக்க இயலாத முன்னேற்றங்களை எளிதாக ஏற்படுத்தும் என்பது உறுதி.!! பெண்ணும் ஆணும் ஆதிக்கத்தின் குறியீடாகவோ அடிமைதனத்தின் குறியீடாகவோ மனித சமூகத்தில் இல்லாத நிலையை ஏற்படுத்துவதையே நோக்கமாக செயல்பட்டு வாழ்ந்து காட்டுவோம்.
_ Dr.ஜான்சிபால்ராஜ்


