மழைக்காலம் வரும் முன்பு ஏரல் தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகளை அகற்ற வேண்டும் என்று தாமிரபரணி நல விரும்பிகள் சார்பில் முத்தாலங்குறிச்சி காமராசு கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம், மாவட்ட வனத்துறை மற்றும் மேல ஆழ்வார்தோப்பூர் கிராம உதயம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா ஆதிச்சநல்லூர் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடந்தது. தாமிரபரணி நதிக்கரையில் பனை விதை விதைத்தல், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல், ஜோஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் 50 ஆயிரம் விதைப்பந்துகள் விதைத்தல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் இளையராஜா முன்னிலை வகித்தார். கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்றார்.
விழாவிற்குத் தலைமை தாங்கி, பேருரையாற்றி, மரக்கன்றுகளை நட்டு, பனை விதைகளை விதைத்து, விதைப்பந்துகளை வழங்கி விழாவைத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார்.
இதில் கருத்துரையாற்றி தாமிரபரணி முள்செடி அகற்றும் பணி ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசியதாவது: “தற்போது மாவடிபண்ணை வரை தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எஸ்கேவேட்டர் (Excavator) மற்றும் பொக்லைன் (Komatsu) வாடகை இல்லா இயந்திரங்கள் மூலம் அகற்றிவிட்டோம். தற்போது ஏரல் பகுதியில் முள்செடிகள் அடர்ந்து காணப்படுகின்றன. இந்த முள்செடிகளை மழைக்காலத்திற்குள் அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், மழைக்காலத்தில் ஏரல் பகுதியில் மழை வெள்ளம் புக வாய்ப்புள்ளது. எனவே, உடனே இதற்கான நடவடிக்கையை நீர்வளத்துறை மூலம் எடுக்க வேண்டும்” எனப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாஹீர், கோரம்பள்ளம் கீழ் தாமிரபரணி வடிநிலக் கோட்டம் செயற்பொறியாளர் தங்கராஜ், ஆணையாளர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னத்துரை, பொறியாளர் வெள்ளப்பாண்டி, பொறியாளர் சதீஷ், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் வெ.மாலா, வனத்துறை ரேஞ்சர்கள் செல்வராஜ், சரவணன், வருவாய் ஆய்வாளர் மகாராஜன், பணி மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பஞ்சாயத்து எழுத்தர் கெத்ஸியாள், டி.வி.எஸ் சந்தியாராயன், ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ரகுமத் பீவி, முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சங்கர்கணேஷ், ஊர்பிரமுகர்கள் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகசெல்வி, செல்வம், மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். பகுதி பொறுப்பாளர் ஆனந்த செல்வன் நன்றி கூறினார்.


