தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 212 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 12 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை மரணம் / விபத்து மரணம் நிதியுதவியாக ரூ.4,40,000/- பெறுவதற்கான ஆணையினையும் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,03,600/- மதிப்பிலான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) / மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


