சுத்தமல்லி ஊர் மீது எனக்கு மிகுந்த நாட்டம் உண்டு. ஏன் என்றால் நான் பிறந்த முத்தாலங்குறிச்சி கிராமத்தில் நல்லாண் பிள்ளை பெற்ற குணவதி அம்மன் ஆலயம் உள்ளது. அதே போல் சுத்தமல்லியிலும் ஆலயம் உள்ளது என அறிந்தேன். அந்தநாளில் இருந்து சுத்தமல்லி மீது தீவிரபற்று.
திருநெல்வேலி கால்வாய் தோன்றும் இடமும் சுத்தமல்லித்தான். அதுவும் அழகான இடம் சுத்தமல்லி அணைக்கட்டு. இந்த அணைக்கட்டில் மராமத்து பணி நடக்கும் போதுசென்று இருக்கிறேன். மிகப்பிரமாண்டமாக இருக்கும். அதன் பின் தண்ணீர் நிறைந்து இருக்கும் வேளையில் இந்த இடமே ரம்மியமாக இருக்கும். அணைக்கட்டு இரண்டு பிரிவாக பிரிந்து, நடுவில் மயிலாடும் பாறையோடு கம்பீரமாக நிற்கும். நமது முன்னோர்களின் அறிவு திறன் இதுபோன்ற தடுப்பணைகளை எவ்வளவு சிறப்பாகவும், நேர்த்தியாகவும் கட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். சுத்தமல்லி என்றவுடனே பேராசிரியர் ஹரிஹரன் அய்யா எழுதிய பரண் வெட்டு நூல்தான் நமக்கு நினைவுக்கு வரும்.
அந்த அளவுக்கு அங்குள்ள சிறு தெய்வ வழிபாடு குறித்து எழுத்தப்பட்ட நூல். இந்த நூலை வைத்துக்கொண்டு தான் எனது நூலும் நகர்ந்துள்ளது.


