தூத்துக்குடி மாவட்டத்தில் சிஎன்ஜி பிரச்சனையால் அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் உரிய வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் நகரப் பேருந்துகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் மாற்று வழித்தடங்களில் கட்டணத்துடன் இயக்கப்படுகின்றன. பெண்களுக்காக கட்டணமில்லாமல் இயக்கப்பட்ட பேருந்துகளை மாற்றி பொது மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தூத்துக்குடி- நாசரேத் தூத்துக்குடி- சாயர்புரம் பகுதியில் ஓடக்கூடிய நகரப் பேருந்துகளை ஒழுங்காகவே இயக்குவது கிடையாது.
தூத்துக்குடி – நாசரேத் புறநகர் பேருந்துகளும் ஒழுங்காக இயக்கப்படுவது கிடையாது. தூத்துக்குடியில் இருந்து நாசரேத்துக்கு இரவு 10:10க்கு புறப்படக்கூடிய கடைசி பேருந்து கடந்த ஒரு வார காலங்களாக இரவு 12 மணிமேல் தான் இயக்கப்படுகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் தாய்மார்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதிலே சொல்வது கிடையாது. டிரைவர் கேஸ் அடைக்க சென்றுள்ளார் வருவார் வருவார் வருவார் என்று இரண்டு மணி நேரங்கள் மேலாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தூத்துக்குடி பணிமனையில் சிஎன்ஜி கேஸ் பங்க் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் புதிதாக இயக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஒரு பேருந்துகளும் சரியான நேரத்துக்கு இயக்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.
ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்து தூத்துக்குடி நகரக் கிளையில் இருந்து இயக்கக்கூடிய பேருந்துகளை சரியான நேரத்திற்குள் சரியான வழித்தடத்திலும் இயக்க அறிவுறுத்துமாறும் உடனடியாக சிஎன்ஜி பங்க் டெப்போ உள்ளே அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


