சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் மிக முக்கியமானது. சுதந்திர போராட்டம் இந்தியா முழுவதும் கடுமையாக இருந்தபோது, 1942-ம் ஆண்டு ஆக.8-ம் தேதி மும்பையில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி “செய் அல்லது செத்து மடி” என்று முழங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படும் இந்த போராட்டம் நாடு முழுவதும் முன்னெடுத்து செல்லப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் ஏராளமானோரை ஆங்கிலேய அரசு கைது செய்தது.
இதில் கோவில்பட்டி அருகே கடலையூரில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டம் கவனிக்க தக்க ஒன்றாகும். கடலையூர் கிராமத்தை சேர்ந்த 34 நெசவாளர்கள் வெயிலுகந்த முதலியார் தலைமையில் ஆக.22-ம் தேதி வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்தினர். ச.வெயிலுகாத்த முதலியார் தலைமையில் இளைஞர் படை கொதித்தெழுந்தது. 1942 ஆகஸ்ட் 22 இல் அரசு அலுவலகங்களைச் செயல்பட விடாமல் தடுத்து மறித்தனர். ஆங்கிலேயரின் போலீஸ் அடக்கு முறையைக் கையிலெடுத்தது.
வீர இளைஞன் மாடசாமியைக் கைது செய்தது மட்டுமின்றி, அவரை ஆடைகளின்றி தெரு வீதிகளில் இழுத்துச் சென்றது போலீஸ். வெகுண்டெழுந்த இளைஞர்களும். பொதுமக்களும் போலீசாரை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கைகலப்பு ஆனது. கலைந்து செல்லுங்கள் என்று சப்தமிட்ட போலீஸ் தடியடியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
போர்க்களமானது கடலையூர் வீதிகள். துப்பாக்கிக்கு அஞ்சாமல் போலீசைத் தாக்கினர். கையில் உலக்கையை எடுத்து போலீசை அடித்த கு. ராமசாமி முதலியாரின் கைவிரலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. ஆள்காட்டி விரல் துண்டானது. அவரது கையிலிருந்து நழுவிய உலக்கையை எடுத்து மா.மாடசாமி முதலியார் தாக்கத் தொடங்கினார். அவரது அடியை எதிர்கொள்ள முடியாத போலீசார் அவரது இடுப்பில் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். மற்றொரு குண்டு வெ.சங்கர லிங்க முதலியாரின் அடி வயிற்றைத் துளைத்துச் சென்றதால் அந்த இடத்திலே உயிரை விட்டார்.
நெசவு செய்த வீதியிலே இரத்தச் சேறானது. நாட்டின் விடுதலைக்காக மூன்று பேர் குண்டடி பட்டனர். ஒருவர் மாண்டார். இருவர் நடை பிணமானார்கள்.
பொழுது விடிந்தது… ஆகஸ்ட் 23 அதிகாலை 5 மணி கடலையூர் கிராமம் ஆயுத போலிசால் சுற்றி வளைக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள், முதியவர் என்று ஈவு இரக்கமில்லாமல் தடியடி நடந்தது. நெசவுத் தறிகளை உடைத்து அழித்தனர். பாவுகளை அறுத்தெறிந்த அநியாயம் எங்குமில்லை. 150 மக்கள் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப் பட்டனர்.
போராட்ட வீரர்களை கண்டறிந்த போலீசார் 32 இளைஞர்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை விடுதலை செய்தனர். ச.வெயிலுகாத்த முதலியார் 11/2 ஆண்டுகள் அலிப்புரம், கண்ணபுரம் சிறைகளில் சிறைவாசம். பா.பாண்டிய முதலியார் 2 1/2 ஆண்டுகள் வேலூர் தஞ்சாவூர் சிறைகளில் பாதுகாப்புக் கைதியானார். தியாகத்திற்கு இலக்கணமான 32 தியாகிகளைத் தந்த கடலையூரை மறக்க முடியுமா?
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில், தென் கோடி கிராமமான கடலையூரில் நடந்த போராட்டம் வெளியே தெரியவில்லை. தியாகிகளை நினைவு கூறும் வகையில், அங்குள்ள செங்குந்தர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இதில் போராட்டத்தில் பங்கேற்ற 34 தியாகிகளின் பெயர்களும், தலைமை வகித்த வெயிலுகந்த முதலியாரின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்தூபியில் ஆண்டுதோறும் ஆக.22-ம் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
2014-ம் ஆண்டு கோவில்பட்டி சார் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் தலைமையில் கடலையூரில் வெள்ளையனே வெளியேறு போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தற்போது வரை கோவில்பட்டி கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.