தூத்துக்குடியில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மற்றும் அனல்மின் நிலையங்களில் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மற்றும் அனல்மின் நிலையங்களில் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் என மொத்தம் 380 பேரில், இன்று 198 பேர் பணிக்கு வரவில்லை. ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் காரணமாக, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கப்பல்களில் நடைபெற வேண்டிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகள் முழுமையாக முடங்கின. மேலும், அலுவலகப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
என்.டி.பி.எல் அனல்மின் நிலையங்களில் பணிபுரியும் சுமார் 1,600 ஒப்பந்த தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாகப் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அனல்மின் நிலையத்தின் தினசரி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் 1,450 அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களில், 998 பேர் பணிக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக மின் உற்பத்தி மற்றும் அலுவலகப் பணிகள் ஸ்தம்பித்தன.
அரசு சார்ந்த நிறுவனங்களில் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், மற்றும் டாக் உரத் தொழிற்சாலைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்குத் திரும்பினர்.
அதேபோல், மாவட்டத்தின் பிற தனியார் தொழிற்சாலைகளும் தடையின்றி இயங்கின. நாடு தழுவிய இந்த போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அத்தியாவசிய சேவைகள் மேலும் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.


