தூத்துக்குடியில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து ஏழு தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு ஏழு முக்கிய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்திற்கு எல்.பி.எப் தொழிற்சங்கத் தலைவர் சுசி ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் எல்.பி.எப் மாவட்டச் செயலாளர் கருப்பசாமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் செய்யது இப்ராஹிம் பாஷா, சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் ரசல், சிவபெருமாள், சங்கரன், காசி, ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்டத் தலைவர் மின்னல் அம்ஜத், சகாயம், சிவராமன், எச்.எம்.எஸ் மாநிலச் செயலாளர் ராஜலட்சுமி, மாவட்டத் தலைவர் ராஜ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் ராதா, ஏ.ஐ.டி.யு.சி பொருளாளர் பாலசிங்கம், முத்துக்குமார், முத்துலட்சுமி, யூ.டி.யு.சி மாவட்டத் தலைவர் அலெக்சாண்டர், கருப்பசாமி, ஐ.என்.டி.யு.சி மாவட்டத் தலைவர் ராஜகோபால், பாலராஜ், சந்திரசேகர், ஸ்டீபன், ஐக்கிய விவசாய முன்னணி சங்கப் பிரதிநிதி ராகவன் உட்பட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியபடி மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.


