திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பிருந்த பழைய புறக்காவல் நிலையக் கட்டடத்தை இடித்து அகற்றும் பணிகள் நேற்று நடைபெற்றன.
திருச்செந்தூர் முருகன் கோவில் முகப்புப் பகுதியில் அமைந்திருந்த பழைய புறக்காவல் நிலையக் கட்டடமானது, கோவிலின் பிரம்மாண்ட முகப்பு அழகை மறைக்கும் வகையில் இருப்பதாகப் பக்தர்கள் மற்றும் ஆன்மீக அமைப்பினர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இக்கோவிலில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாகப் பிரம்மாண்ட பெருந்திட்ட வளாகப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவில் முகப்பை மறைக்கும் புறக்காவல் நிலையத்தை அங்கிருந்து அகற்றி, சிறிது தூரம் தள்ளி கடற்கரை ஓரமாகப் புதியதாக அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் அறிவித்திருந்தன.
அதன்படி, கடற்கரை ஓரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய புறக்காவல் நிலையக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மே 31-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. புதிய காவல் நிலையம் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து, கோவில் முகப்பில் காலியாக இருந்த பழைய புறக்காவல் நிலையக் கட்டடத்தை இடித்து அகற்றும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்தக் கட்டட அகற்றம் காரணமாக, இப்போது கடற்கரையில் இருந்து பார்க்கும்போது எவ்வித மறைப்போ இடையூறோ இன்றி கோவிலின் முழு முகப்புப் பகுதியும் மிக அழகாகக் காட்சியளிக்கிறது. இதனால் திருச்செந்தூருக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


