தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தொல்லியல் சின்னம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுமார் 3500 வருடம் பழமையானது என கருதப்படும் இந்த தொல்லியல் எச்சம் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு இணையானது. சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இவ்விடத் தினை ஆய்வு செய்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அலெக்ஸாண்டர் இரியா என்பவர் ஆதிச்சநல்லூர் தொல்லியல் இடத்தினை போல தாமிரபரணி ஆற்றங்கரையில் 37 இடங்கள் உள்ளன என பட்டியலிட் டுள்ளார். அதில் கொங்கராய குறிச்சியும் ஒரு இடமாகும். இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய மத்திய தொல்லியல் துறை இயக்–குனர் அருள்ராஜ் தலைமையில் 2022ஆம் ஆண்டு ஆய்வு நடத்தியது. அதன்பின் இந்தியாவிலேயே முதல் முதல் சைட் மியூசியத்தினை ஆதிச்சநல்லூரில் அமைந்தனர். அப்போது வாழ்விடத்தினை கண்டு பிடிக்கும் விதமாக திருக்களூர், அகரம், ஆதிச்சநல்லூர், கருங்குளம், கொங்கராயகுறிச்சி ஆகிய ஐந்து இடங்களில் அகழாய்வு செய்யப்படும் என கூறினார்கள். அனால் அகரத்திலும் , திருக்களூர், ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் அகழாய்வு நடந்தது. ஆனால் கொங்கராயகுறிச்சியில் இது வரை அகழாய்வு செய்யப்படவில்லை. இதற்கிடையில் திருச்செந்தூர் தொழில் வழிச்சாலை அமைத்த போது பல தொல்லியல் தளங்கள் அழிந்தது. தற்போது சாலையின் இருபுறமும் மரம் வைக்க குழிதோண்டிய போது மண் பாண்டங்கள் கிடைத்தது.
அதில் ஒரு மண்பாண்டம் வெளியே தெரிந்த நிலையில் நானும் (எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு), கொங்கராயகுறிச்சியை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்தவுடன் தொல்லியல் துறை பொறுப்பு தலைவர் டாக்டர் சுதாகர், தொல்லியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அதன் பின் அவர்கள் இந்த மண்பாண்டத்தினை பல்கலைகழத்தில் உள்ள அருங்காட்சி யகத்தில் வைப்பதற்கு கொண்டு சென்றனர். இது குறித்து உதவி பேராசிரியர் டாக்டர் முருகன் கூறும் போது, சுமார் 100 வருடங்களுக்கு முன்பே அலெக்ஸ்டர் இரியா கண்டு பிடித்த தொல்லியல் தளங்களில் கொங்கராயகுறிச்சியும் ஒன்றாகும். இங்கு பல முறை அகழாய்வு செய்ய ஆய்வாளர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, இயற்கை அழிவு, குடியிருப்பு அமைத்தல், சாலை அமைத்தல் போன்ற நிகழ்வுகளால் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு கறுப்பு , சிவப்பு, கறுப்பு சிவப்பு மண்பாண்டங்கள் இருந்தற்கான சான்றுகள் அதிகமாக உள்ளது.
தற்போது கிடைத்துள்ள இந்த மண்பாண்டம் 15 செமீ அகலம் 15செ.மீ உயரம் கொண்டது. வெளியே சிவப்பு நிறத்திலும் உள்ளே கறுப்பு நிறத்திலும் காணப்படுகிறது. மேலும் அழகிய வேலைப் பாடுகளுடன் இந்த மண்பாண்டம் அமைந்துள்ளது. இதன் காலம் கிட்டதட்ட 1800 வருடங்கள் கொண்டாதாக இருக்கும் என கணிக்கிறோம். முறைப்படி கார்பன்டேட்டிங் செய்து இந்த காலத்தினை அறிந்து கொள்ளலாம். இதுபோக இவ்விடத்தில் அதிகமான கறுப்பு, சிவப்பு, கறுப்பு சிவப்பு மண்பாண்டங்கள் இருந்தற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. இந்தபானையை எங்கள் பல்கலைகழக தொல்லியல் துறை சார்பான அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த உள்ளோம் என்று கூறினார்.
தொடர்ந்து தொல்லியல் சின்னங்களை கண்டு பிடித்து காட்சிபடுத்தும் மனோன்மணிய சுந்தரனார் பல்கழக துணை வேந்தர், துறைத்தலைவர், பேராசிரியர்களை தொல்லியல் ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் 144 வது நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இடைச்சங்கச் சுவடுகள் நிறைந்த தாமிரபரணிக்கரை என்ற தலைப்பில் நான் பேசினேன்.
கொற்கையில் இடைச்சங்கம் இருந்த சுவடுகளை சுட்டிக்காட்டி பேசினேன். ஆதிச்சநல்லூரில் புதைந்து கிடக்கும் தகவல்களை ஒவ்வொரு தமிழரும் உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும். இடைச்சங்கம் இருந்து கீழடியை விட முந்தைய நாகரீகம் ஆதிச்ச நல்லூர், தாமிரபரணி ஆற்றங் கரையில் உள்ள ஆதிச்ச நல்லூர், கொற்கை, சிவகளை, போன்றவை இந்த நாகரீகத்துக்கு முந்தையது. ஆதிச்சநல்லூர் இறந்த மனிதர்களை புதைத்த இடங்களில் பல்வேறு தகவல்கள் புதைந்து கிடக்கிறது. சுகாதரத்துக்கு சுமார் 3500 வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்கள். ஆகவே தான் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் வைத்து புதைத்து இருக்கிறார்கள். சங்க கால பாடல்கள் உண்மை என்று உணர்த்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் ஆதிச்சநல்லூரில் நடந்துள்ளது.
தொல்லியல் துறையினர் சங்க கால பாடலில் பாடப்பட்டது உண்மை என்பதை நிருபணம் செய்து வருகிறார்கள். சுமார் 124 வருடங்களுக்கு முன்பே அலெக் ஸாண்டர் இரியா தாமிரபரணி கரையில் 37 தொல்லியல் தளங்களை அடையாளம் காட்டி விட்டு சென்று இருக்கிறார். நாம் தற்போது சுமார் 7 இடங்களில் மட்டுமே ஆய்வு மேற்கொண்டுள்ளோம். மேலும் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். கீழடி அருங்காட்சியம் , கீழடியில் மற்றொரு இடத்தில் ஆய்வு செய்து எடுத்த பொருள்களை காட்சி படுத்திய இடமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் இந்தியாவிலேயே முதல் முதலாக சைட் மியூசியத்தினை அமைத்துள்ளது. உள்ளது உள்ளபடியே தொல்லியல் ஆய்வு செய்த இடத்தில் கண்ணாடி போட்டு சைட் மியூசியத்தினை அமைத்துள்ளார். இது தமிழர்களுக்கெல்லாம் பெருமை. இதை ஒவ்வொரு தமிழரும் கண்டு களிக்கவேண்டும். எனவே தாமிரபரணி கரையில் உள்ள தொல்லியல் தளங்களில் புகழை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தற்போது மாநில அரசு திருநெல்வேலியில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் ஆய்வு செய்த பொருள்களை அருங்காட்சியத்தில் காட்சி படுத்த உள்ளனர். இது கீழடி அருங்காட்சியத்தினை போல மூன்று மடங்கு பெரியதாக அமைய உள்ளது. வருகிற மார்ச்சு மாதம் அதை திறக்க உள்ளார்கள். இந்த காலம் தொல்லியலின் பொற்காலம், தமிழர்கள் பாராம்பரியத்தினை பறைசாற்றும் காலம். ஆகவே தான் நமது அரசு நமக்கு வேண்டிய உதவிகளை செய்கிறது. அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வோம்” என்று பேசினேன்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் ஆய்வு வளமையர்முனைவர் ஜ.ஜான்சிராணி வரவேற்று பேசினார். மதுரை உலகத் தமிழச்சங்கம் ஆய்வறிஞர் முனைவர் சு. சோமசுந்தரி நன்றி கூறினார். என்னை மதுரைதமிழ் சங்கத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வாங்கி தந்தவர் , எனது நண்பர் தமிழக அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற தேனி சுப்பிரமணியன். தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மூலமாக பல நண்பர்கள் கிடைத்தனர்.
( தாமிரபரணி வற்றாமல் ஓடும்)


