தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் சுற்றுவட்டாரப்பகுதியில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால் ஏராளமான குளங்கள் நிரம்பி சாலைகளிலும் கிராமபுறங்களில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தில் திருநெல்வேலி & திருச்செந்தூர் ரயில் பாதை உள்ளது. இதில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மழை காலங்களில் இந்த ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கும். இதனால் இந்த பகுதி மக்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனால் ரயில்வே பாதை அருகே புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு பெய்த கனமழையில் அந்த சாலையும் மூழ்கியது. மேலும் ரயில்வே சுரங்கப்பாதையில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


