தருவையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே, மிகவும் புகழ் பெற்ற தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய டி.எஸ். கிருஷ்ண மூர்த்தி பற்றி அறியவேண்டும். இவர் தருவையை சேர்ந்தவர்.
டி என்றால் தருவை, எஸ். என்றால் சுப்பையா. ஊரையும் அப்பா பெயரையும் முன்னெழுத்தாக கொண்டு தன் பெயரை டி.எஸ். கிருஷ்ண மூர்த்தி என வைத்திருக்கிறார்.
இவர் 1941 ல் பிறந்தார். இந்தியாவின் 13 வது தலைமை தேர் தல் ஆணையராக பிப்ரவரி 2004 முதல் மே 2005 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
இவர் முன்னாள் இந்திய வருவாய் சேவை அதிகாரி ஆவார். லோக் சபாவிற்கு 2004 தேர்தல்களை மேற்பார்வை செய்யும் சிணிசி ஆக பணியாற்றினார் . முன்னதாக அவர் ஜனவரி 2000 முதல் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஆணையராகப் பணியாற்றினார்.
கிருஷ்ணமூர்த்தி இந்திய வருவாய் சேவை அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். அவர் நிறுவன விவகாரங்கள் துறை செயலாளராக பல்வேறு நிலைகளில் அரசாங்கத்தில் பணியாற்றினார். இந்திய அரசின் செயலாளராகவும், இந்திய தலைமை தேர்தல் ஆணையரா கவும் ஆன முதல் இந்திய வருவாய் சேவை அதிகாரி இவர் ஆவார், என்ற பெருமையும் உண்டு.
நிறுவன விவகாரங்கள் துறையின் செயலாளராக, நிறுவனங் களின் உரிமை கோரப்படாத ஈவுத்தொகையிலிருந்து முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியை அமைத்தவர் என்ற பெருமைக்குரியவர்.
கிருஷ்ணமூர்த்தி தனது 19வது வயதில் (தேசியமயமாக்கலுக்கு முன்) பேங்க் ஆஃப் இந்தியாவில் தகுதிகாண் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். அவர் 1963 ஆம் ஆண்டு இந்திய வருவாய் சேவையில் சேர்ந்தார், அதன்பிறகு அவர் சென்னையில் வருமான வரி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் . கப்பல் மற்றும் நிதி உட்பட புது தில்லியில் பல அமைச்சகங்களில் பணியாற்றிய அவர், விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராகப் பணியமர்த்தப்பட்டார் . அவர் கையாண்ட முக்கிய வேலைகளில் ஒன்று பம்பாயில் வருமான வரித்துறையின் தலைமை ஆணையராக பணியாற்றியது .
அவர் எத்தியோப்பியா மற்றும் ஜார்ஜியாவில் மிவிதி ஆலோசகராகவும் பணியாற்றினார் . தலைமைத் தேர்தல் ஆணையராக அவர் ஜிம்பாப்வே தேர்தல் மற்றும் 2004 இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல்களின் பார்வையாளராக இருந்தார் என்பது மேலும் குறிப்பிடத்தக்கதாகும் . 2005 ஆம் ஆண்டில், பிசிசிஐக்குள் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு இடையே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசி) தேர்தல்களை நடத்துவதற்காக கிருஷ்ணமூர்த்தி இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் தருவை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் இவர் திருச்சிராப் பள்ளியில் பிறந்து வளர்ந்தார் மற்றும் பரோடாவில் உயர்நிலைப் பள்ளி படித்தார். அவர் பெங்களூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார் . மைசூர் பல்கலைக் கழகத்தில் வரலாறு, பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் கிருஷ்ணமூர்த்தி தங்கப் பதக்கங்களை வென்றார் . அவர் ஹிரி பாத் பல்கலைக்கழகத்தில் நிதியியல் படிப்பில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தவர்.
ஓய்வு பெற்ற பிறகு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார். சென்னை கேந்திரா பாரதிய வித்யா பவன் தலைவராக இருந்தார். அவர் 2008 இல் வெளியிட்ட “ஜனநாயகத்தின் அதிசயங்கள்” என்ற புத்தகம் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.
கிருஷ்ணமூர்த்தி சென்னையைச் சேர்ந்த வீணை கலைஞரான கீதா கிருஷ்ணமூர்த்தியை மணந்தார் .
இவரை பற்றி நெல்லையில் ஓவியர் வள்ளிநாயகம் அவர்களிடம் விசாரித்தேன். அவருக்கு தருவை அச்சம் தீர்த்த சாஸ்தாதான் குலதெய்வம். கடந்த பங்குனி உத்திரத்தில் கிருஷ்ண மூர்த்தி அய்யாவின் மகள் சாமி கும்பிட வந்துள்ளார்.
இந்த தகவலை சொன்ன ஓவியரிடம் மேலும் இவரை பத்தி விசாரித்தேன்.
திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் அல்லது டி. என். சேஷன் இந்தியாவின் 10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றவர். இந்த காலகட்டத்தில் அவர் தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவதில் எடுத்த முனைப்பான நடவடிக்கைகளால் பெரிதும் அறியப்படுகிறார்.
இவர் கேரளா பாலக்காட்டில் உள்ள திருநெல்லை எனும் சிற்றூரில் தந்தை டி. எஸ். நாராயணய்யர், தாயார் சீதாலட்சுமிக்கு பிறந்தவர் டி. என்.சேஷன்.
கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்கு வரத்து துறை இயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். இவரின் தாயாருக்கு தாமிரபரணி ஆற்றங்கரை கல்லிடைக் குறிச்சியில் உறவினர்கள் உள்ளனர் என்பர். இவர் 1990 திசம்பர் 12ஆம் தேதி முதல் 6 ஆண்டுகளுக்கு இவர் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பல. இவரது சில நடவடிக்கைகள் பலத்த விமர்சனத் துக்கு உள்ளான போதிலும் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர்திருத்தங்களை செய்தது குறிப்பிடத்தக்கது.
இவர் வழியில் டி.எஸ். கிருஷ்ண மூர்த்தி தேர்தல் பிரச்சாரத்தினை இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்பதை நடமுறை படுத்தினர். மேலும் தேர்தல் கட்டுபாடுகளை சீரமைத்த பங்கு இவருக்கும் உண்டு.
இவர் தற்போதும் சென்னையில் ஆழ்வார் பேட்டையில் வசித்து வருகிறார். இவரை நமது ஓவியர் சென்னையில் உள்ள கூட்டத்தில் சந்தித்துள்ளார். அந்த இடத்தில் வைத்து அவர் படத்தினை வரைந்து உடனே அவரிடம் கொடுத்துள்ளார். அவர் சந்தோசப்பட்டார். “தருவை அச்சம் தீர்த்தான் சாஸ்தா தான் எனக்கு குல தெய்வம்” என்று கூறியவுடன் அவரும் சந்தோசப்பட்டுள்ளார். ஏன் என்றால் இருவருக்கும் குலதெய்வம் தருவை அச்சம் தீர்த்தான் தான்.
ஓவியர் வள்ளிநாயகம், சாகித்ய அகாடமி விருதாளர் தி.க.சி அவர்களின் பிரதம சிஷ்யன். பாளையங்கோட்டை மு.ந. அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளயில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தற்போது இவர் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செந்தமிழ் சிற்பிகள் அரங்கத்தில் தமிழ் அறிஞர்கள் வரைபடம் வரைந்து ஆவணப்படுத்தும் குழுவில் இருக்கிறார். தற்போது அதற்கான படங்களை வரைந்து முடித்துள்ளார்.
இந்த பணியில்போது இவர் டி.எஸ்.கிருஷ்ண மூர்த்தியை சென்னையில் சந்தித்துள்ளார்.
ஆதிச்சநல்லூர் குறித்து முதல் தமிழ் நூல் எழுதிய சாத்தான்குளம் ராகவன் புகைப்படத்தினை இந்த பணிக்காக நான்தான் கொடுத்தேன் என்பது எனக்கு பெருமை (ஆசிரியர் மு.க)
இனி இதே ஊரை சேர்ந்த மற்றொரு ஆளுமையை பற்றி பேசுவோம்.
(நதி வற்றாமல் ஓடும்)