அவசர அவசரமாக சிகிச்சை ஆரம்பித்தனர்.
ஒரு நர்ஸ் வேகமாக வந்தாள். பேப்பர் ஒன்றை காட்டி காளியிடம் கையெழுத்து வாங்கினாள்.
இவனுக்கு பயமாக இருந்தது. ஏதோ நடக்க போகிறது. அதனால் தான் இப்படி கையெழுத்து வாங்குகிறார்கள்.
இந்த பெண் கனவுடன் வந்து தன்னை கை பிடித்து ஒரு நாள் கூட வாழ வில்லையே. ஆனால் இவள் கன்னியாகவே உயிர் பிரிந்து போய் விடும் போல தெரிகிறதே.
அழுத்தான். தேம்பி தேம்பி அழுதான். சிறுகுழந்தை போல தேம்பி தேம்பி அழுதான்.
தாத்தாவால் இவனை தேற்ற இயலவில்லை. வேறு என்னசெய்யவென்றும் தெரியவில்லை.
“காளி, ஏடே காளி. பொருமையா இரு”.
தாணுலிங்கம் சார் ஆள் அனுப்பியிருந்தார். ஆனால் அவர் வரவில்லை. பாவம் அவருக்கு அரசை எதிர்க்க இயலவில்லை.
வந்தவர்கள் சொன்னார்கள். “காளி சம்பவத்தை கேள்வி பட்டார் நம்ம டைரக்டர். உடனே எங்களை அனுப்பி பார்த்துட்டு வரச்சொன்னார் . என்ன உதவினாலும் செய்வாராம்”. என்றனர்.
சிரித்தான். உதவியா? அவனுக்கு விரக்தியாக இருந்தது. சோகமாக சிரித்தான்.
தொண்டு நிறுவனம் வளரும் வரை அவனையும் செல்வியையும் பயன்படுத்தியவர். இவர்கள் உதவி கிடைக்கும் என தெரிந்து அவர்களை உடன் வைத்துக்கொண்டவர். பொதிகை மலையில் காட்டுக்குள் நல்லநடு ராத்திரியில் காணி இன மக்களோடு மக்களாக அலையவிட்டவர். தொண்டு என்றால் என்னவென்று சிறு வயதிலேயே உணர்த்தியவர். தாமிரபரணி மீது பாசத்தினையும் பரிவையும் ஏற்பட வைத்தவர். இன்றோ நாங்கள் சேவையை சேவையாக நினைக்கிறோம். தாமிரபரணி பாசத்தினை உயிரை விட மேலாக மதிக்கிறோம். ஆனால் அதையெல்லாம் தொண்டு நிறுவன இயக்குனர் இயந்திர தனமாகவும் வியாபர தனமாகவும் தான் செய்திருக்கிறார் என்பது இப்போது தான் காளிக்கு புரிகிறது.
தொண்டு என்பது நம்மை கொடுத்து, நமது உடல் உள்ளம் அனைத்தையும் அர்ப்பணித்து செய்ய வேண்டியது. ஆனால் இங்கே இவர் அரசு தரும் பணிகளை பணம் வாங்கி கொண்டு செய்யும் ஒரு ஒப்பந்த காரராக செயல்பட்டு உள்ளார். ஆகவே தான் மணல் பிரச்சனையில் இருவரும் மாட்டியவுடன் அப்படியே விட்டு விட்டார். பிரச்சனை முற்றியவுடன் கண்டும் காணாமலும் இருந்து விட்டார். ஆனால் இப்போது அப்படியல்ல. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல நம்மையும் மனம் நோக கூடாது என தாஜா பண்ண ஆள் அனுப்பி யிருக்கிறார். ஒரு வேளை அரசு சார்பில் கேட்டால் நான் எங்கே செல்வியை பார்க்க போனேன் என சொல்லி தப்பிச்சு கொள்வார் தாணுலிங்கம்.
என்ன உலகம்.
இப்போது எல்லாமே புரிகிறது காளிக்கு. மக்கள் எங்கே போகிறார்கள். யாரிடம் சிக்குகிறார்கள். என்பதும் புரிகிறது. ஆனால் நல்லது எது கெட்டது எது என்ன தெரியவில்லையே. இலவசம் என்றால் எல்லாத்தையும் இழக்க தயாராகி விட்டார்கள். பணம் கொடுத்தால் தான் பொதுக்கூட்டத்துக்கு வருவோம் என்ற மனநிலையை வகுத்ததே இந்த தொண்டு நிறுவனம் தான். இதையெல்லாம் இப்போது நினைத்து என்ன பயன்.
அவனுக்கு இப்போது செல்வி உயிர் பிழைக்க வேண்டும். அது மட்டும்தான் தனது மனதுக்குள் ஓடிக் இருந்தது. என் தாய் தாமிரபரணி தாய். அவள்தான் என்னுடைய கடவுள். அவள்தான் என் செல்வியை காப்பாற்ற வேண்டும். அவள் கொட்டிய உதிரம் என் தாய் தாமிரபரணிக்கானது. என் தாயை நான் காப்பாற்ற வேண்டும் என்றால் செல்வி உயிரோடு இருக்க வேண்டும். யார் என்னை விட்டு சென்றாலும், இந்த உலகமே என்னை எதிர்த்து நின்றாலும் செல்வி மட்டும் என் தோளோடு தோள் நின்றால் போதும் நான் ஜெயித்து விடுவேன். என் நதியை நான் காப்பாற்றி விடுவேன்.
அவனுக்கு நொடிப்பொழுதும் பெரும் தூரமாக போய் கொண்டிருந்தது. கடிகார முள் நகர மறுத்துக்கொண்டிருந்தது. அவசர சிகிச்சை பிரிவுக்குள் சென்று வரும் ஒவ்வொரு நர்ஸ் முகத்தினையும் பார்த்துக்கொண்டிருந்தான். தாத்தாதான் இவனுக்கு ஆறுதலாக கூடவே நின்றார்.
ஆறுதல் சொல்ல வேண்டும் என தொண்டு நிறுவனத்துக் காரர்கள் அருகில் நின்று பேசும் போது இவனுக்கு வெறுப்பாக இருந்தது.
ஒரு காலகட்டத்தில் அவர்கள் இருவரையும் பார்த்து இருகையையும் கூம்பி கண்ணால் போய் வாருங்கள் என கண்ணீர் மல்க நின்றான்.
அந்த முகத்தோடு ஒருதடவை கூட அவனை அவர்கள் பார்க்க வில்லை. சொரி முத்து அய்யனாராக அவன் வேடமேற்று நதியை காப்பாற்ற மக்களிடம் அருள்வாக்கு கூறும் போது உருண்டை கண்ணோடு இருந்த அவனின் அந்த தோரணை இன்று அவனிடம் இல்லை.
மக்களை சிந்திக்க வைக்க அவன் நாடகத்தில் நகைச்சுவை வேடமேற்று காமடி செய்வானே அந்த சிரித்த முகம் இன்று அவனிடம் இல்லை.
இன்று அவனின் வேதனையை கண்டு வந்தவர்கள் இருவரும் என்ன பேச வென்றே தெரியாமல் அங்கிருந்து நகர முடிவு செய்தனர்.
காளி. “நாங்க போறோம். எதுவுனாலும் சொல்லி விடு நாங்க வாறோம்” என்றனர்.
காளி தலையை ஆட்டினான்.
அவர்களுக்கு புரிந்தது. தங்களது உதவியை அவன் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. எனவே இனி அங்கு நின்று எந்தவொரு பயனும் இல்லை என கிளம்பினார்கள்.
உண்மைத்தான். உடனே இருந்து இவன் உதவி செய்த ஊர் மக்கள், தொண்டு நிறுவன மக்களை விட, யார் எவர் என முகம் தெரியாமல் எதிரே நிற்கிறார்களே அந்த நான்கு இஸ்லாமிய சகோதரர்கள். அவர்கள் இவன் மனதில் மலைபோல உயர்ந்து நின்றனர்.
யாரை பற்றியும் இவனுக்கு கவலையில்லை. யார் எங்கே போனாலும் அவனுக்கு தேவையும் இல்லை. செல்வி உயிர் பிழைத்து வரவேண்டும். அவளை நாம் காணவேண்டும். பழைய காலம் போல அவளோடு வலம் வரவேண்டும்.
கண்களில் இருந்து வடியும் நீர் எதிரே இருப்பவர்களை யெல்லாம் மங்கலாக காட்டியது. அதோ எதிரே அவசர சிகிச்சை பிரிவில் இருந்து டாக்டர் வெளியே வருவது மங்கலாக தெரிந்தது. கண்ணை கசக்கி கொண்டு பார்த்தான். ஆம் டாக்டர் தான்.
ஓடியே போனான். “டாக்டரய்யா. எப்படியிருக்கா என் மனைவி”.
டாக்டர் இவனை ஏற இறங்க பார்த்தார். “நீங்க கொஞ்சம் என் ரூம்புக்கு வாங்க” என சொல்லிவிட்டு கிளம்பினார்.
அவர் ஒன்றுமே சொல்லவில்லை என்றவுடன் செல்விக்கு என்ன ஆச்சோ தெரியலையே. என அந்த அவசர சிகிச்சை பிரிவில் கண்ணாடி கிளாஸ் வழியே தெரியும் மிகச் சிறிய் ரவுண்ட் சைஸ் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தான்.
அங்கே பச்சை போர்வையில் போத்தப்பட்ட செல்வி மூக்கில் டியூப் வழியாக ஆக்ஸிசன் இறங்க கண்ணை மூடியப்படியே படுத்து இருந்தாள்.
அவளை நன்கு கூர்ந்து கவனித்தான்.
“அய்யோ என் செல்வத்துக்கு மூச்சு வருகிறதோ என்னவோ தெரியவில்லையே”. என தவித்தப்படியே பார்த்தான்.
நன்றாக பார்த்த போது தெரிந்தது. அவளுக்கு மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. இப்போது தான் இவனுக்கு மூச்சே வந்தது. வேகமாக தாத்தாவை கூப்பிட்டுக்கொண்டு டாக்டர் இருந்த அறைக்கு ஓடியே வந்தான்.
அங்கிருந்த சிப்பந்தி, “கொஞ்ச நேரம் இருங்கள்” என்று கூறினார். எனவே படபடப்பு அடங்காமல் வெளியே நின்று கொண்டிருந்தான்.
என்ன சொல்லப்போகிறார். நிச்சயம் என் செல்விக்கு உயிர் போகாது. அவள் என்னை விட்டு விட்டு போக மாட்டாள். ஆனால் வேறு ஏதாவது சொல்லப்போகிறாரோ. என்ன ஆனாலும் சரி செல்வியை எப்படியாவது பிழைக்க வைத்து தந்தால் போதும். அவளை அப்படியே நான் பாதுகாத்து வைத்துக்கொள்வேன். என் தங்கத்தினை நான் போற்றி பாதுகாத்து கொள்வேன். அவள் ஊனமாகி விட்டாளும் கூட நான் காத்துக்கொள்வேன்.
அவனால் நிற்க முடியவில்லை. அருகில் உள்ள சிமெண்ட பெஞ்சில் அமர்ந்தான். தாத்தாவும் அருகில் அமர்ந்தார்.
சிறிது நேரத்தில் டாக்டர் உள்ளே அழைத்தார்.
இருவரும் வேகமாக உள்ளே ஓடினார்கள்.
“உட்காருங்க”. டாக்டர் எதிரே உள்ள பெஞ்சை காட்டினார்.
“டாக்டர் என் மனைவி எப்படி யிருக்கா?”
“அவங்க நல்லா இருக்காங்க” .
“உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லையே”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஆனா”
“என்ன டாக்டர் ஆனா?”.
“உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருடம் இருக்கும்”.
“இப்ப கொஞ்ச நாளுத்தான்”.
“குழந்தை இருக்கா?”.
“இல்லை”.
“ஏன் குழந்தை பெத்துக்க ஆசைப்படலையா?”
மௌனமாக இருந்தான் காளி.
தாமிரபரணியை காப்பாற்ற நாங்கள் இருவரும் தனிமையில் இருந்தோம் சேரவில்லையென எப்படி சொல்ல. ஆனால் காளி சொல்லாமலேயே எல்லாவற்றையும் புரிந்து கொண்டார் டாக்டர்.
“நான் சொல்றதை கவனமா கேளுங்க. உங்க மனைவி தலையில உள்ள காயத்தை குணப்படுத்திடலாம். அதில ஸ்கேன் எடுத்து பார்த்த போது பெரிய ஆபத்து இல்லை. ஆனால் வயிற்றில் ஏற்றி உதைத்ததில் அவங்களோடு கர்ப்ப பை டேமேச் ஆகிட்டு. அந்த பை இனிமேலும் வயிற்றில் இருந்தா ஆபத்துன்னு, அந்த பையை அகற்றிட்டோம். அதுக்காத்தான் உங்க கிட்ட கையெழுத்து வாங்கினோம்”.
காளி அமைதியாக இருந்தான். ஏதோ நடந்து விட்டது என்று நினைத்தோம். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய் விட்டது.
“மொத்தத்தில் உங்க மனைவியை காப்பாத்திட்டோம். ஆனா இனிமேல் அந்த அம்மா தாயாக முடியாது”.
காளி எழுந்தான். “பராவாயில்லை டாக்டர். என் மனைவி எனக்கு உயிர் பிழைத்ததே போதும். எனக்கு குழந்தை வேணுமுன்னு அவசியம் இல்லை”.
“காளி சார். சொன்னா தப்பா நினைக்காதீங்க. நான் விசாரித்ததில் யாரோ ஒருத்தன் உங்க மனைவி வயிற்றில மிதிச்சதாலத்தான் இப்படி ஆகிட்டுன்னு சொன்னாங்க. நீங்க கம்ளெய்ண்ட கொடுங்க. நாங்க காவல் நிலையத்துக்கு அனுப்பி அவன் மேலே வழக்கு பதிவு பண்ணிருவோம்”.
சிரித்தான். “வழக்கு. வேண்டாம் சார். வேண்டாம். எங்களுக்கு வேண்டாம்”.
“இப்போ ஒண்ணும் கெட்டு போகலை. உன் மனைவி கண்விழிச்ச பிறகு கூட நீங்க ரெண்டு பேரும் கலந்து ஆலோசனை செய்து கூட கேஸ் கொடுங்க”.
தாத்தா சொன்னார். “வேண்டாம் டாக்டர். இவங்க இரண்டு பேருல யார் ஒருத்தர் என்னை முடிவு எடுக்கிறாங்களோ . அந்த முடிவைதான் இரண்டு பேரும் ஒண்ணு போல சொல்லுவாங்க. காளி என்ன சொல்லுதானோ அதைத்தான் செல்வியும் சொல்லுவா. செல்வி என்ன சொல்லுதாளே அதைதான் காளியும் சொல்லுவான். அப்படிபட்ட ஜோடி சார் இது” என்றார்.
டாக்டர் அமைதியாக இருந்தார்.
“சார் என் மனைவியை பார்க்கணும்”.
“ம். போய் பாருங்க”.
காளி அங்கிருந்து கிளம்பினான். தாத்தா அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மெதுவாய் நடந்தார். அதற்குள் அவன் அவசர சிகிச்சை பிரிவுக்குள் சென்று விட்டான்.
இவன் செல்லவும் அவள் கண் விழிக்கவும் சரியாக இருந்தது.
இருவர் கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. பேச முயற்சி செய்தாள். “வேண்டாம் செல்வி. அசையாமல் இரு. இன்னைக்கு நீ பேச வேண்டாம். அமைதியா இரு. உனக்கு ஒண்ணுமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு. பயப்படாதே”. செல்வியின் கை பிடித்துககொண்டான் காளி.
அதற்குள் தாத்தா வந்து விட்டார். தாத்தாவை பார்த்தவுடன் செல்வி அழ ஆரம்பித்தாள்.
“வேண்டாம் செல்வி அழ வேண்டாம். நான் காளி கூட இங்கத்தான் நிக்கேன் கவலை படாதே”. அதற்குள் நர்ஸ் வந்தாள்.
“சார் பேசண்ட் அழக்கூடாது. கிளம்புங்க. கிளம்புங்க. ம் சீக்கிரம்”.
நர்ஸ் சத்தம் போட்டவுடன் செல்வியின் கையை விட்டு விட்டு காளி பெட்டை விட்டு எழுந்தான்.
“செல்வி. வெளியே நிக்கேன். நீ கவலைப்படாதே உனக்கு ஒண்ணுமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு”.
தலையசைத்தாள்.
அவளை விட்டு இருவரும் வெளியே வந்தார்கள்.
*****
சரியாக 15 நாள்கள் ஆகி விட்டது.
காளியையும் செல்வியையும் பார்க்க ஊரில் இருந்து ஒருவர் கூட பார்க்க வரவில்லை. எப்படியும் போலிசில் புகார் செய்து விடுவார்கள் என மாரியப்பன் தலைமறைவாகவே இருந்தான்.
ஊரில் உள்ளவர்களும் போலிஸ் வரும் எனத்தான் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் போலிஸ் வரவில்லை.
நாட்டாமைக்கு பயம். நம்மிடம் இருக்கும் பணத்தினை பிடிங்கி விடுவார்களோ. அல்லது நம்மளையும் சேர்த்து நைய புடைத்துவிடுவார்களோ என பயந்தார்.
சரி ரூபாயை யாரும் எண்ண வில்லை. அப்படியே பாதி கட்டை நாம் பதுக்கி விடுவோம். மீதி கட்டை மட்டும் ஊர் கணக்கில் வைத்துக்கொள்வோம் என திட்டமிட்டார். ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு விதமாக ஓடிக் கொண்டிருந்தது.
ஊர் மக்கள் எண்ணமோ வேறு மாதிரி இருந்தது. காளியும் செல்வியும் பணத்தை அடித்து விட்டார்கள். இதனால் தான் அடிப்பட்டும் கூட போலிசில் புகார் செய்ய வில்லை. என நினைத்தார்கள். அவ்வளவு பேருக்கும் ஒரு அற்ப ஆசை. இவ்வளவு கட்டு கட்டாய் பணம் வைத்திருக்கானே. வீட்டுக்கு இவ்வளவு என பிரித்து கொடுத்து இருக்கலாமே. என அவர்களது குறுக்கு புத்தி வேலை செய்தது. ஆனால் காளியை பற்றி முழுமையாக அவர்களுக்கு தெரியவும் இல்லை. புரியவும் இல்லை.
ஆனால் காளி தெளிவான முடிவில் இருந்தான். மாரியப்பனை போலிசில் பிடித்து கொடுப்பது முடிவல்ல. நதியை காப்பாற்ற வேண்டும். இவன் பின்னால் நாம் மனதை ஈடுபடுத்தினால் அந்த செயல் பாதியில் நின்றுவிடும். மிக அவசரமாய் நதியை காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தான். ஆனால் அந்த படுபாவியால் செல்வி தாய்மை யை இழந்து விட்டாளே என்ற கோபம் இந்த மனிதனுக்கு வரவே இல்லை. இவன் ஒரு தெய்வப்பிறவி.
*****
கிட்டத்தட்ட ஒரு வாரம் போய் விட்டது.
செல்வியை சாதரண வார்டுக்கு மாற்றி விட்டார்கள்.
அவளை காலையில் எழுப்புவது. அவளுக்கு தேவையான உபசரிப்பு, மருந்து மாத்திரை கொடுப்பது , குளிப்பாட்டுவது, காயத்துக்கு மருந்து வைப்பது என ஒரு தாயை போல பார்த்துக்கொண்டான் காளி.
தாத்தா இவர்களுக்காக வெளியே காத்து கிடந்தார். போலீஸ் வந்தது. விசாரித்தார்கள். மாரியப்பன் மீது புகார் எழுதி கேட்டார்கள் கொடுக்கவில்லை. அப்படியில்லை யென்றால் எதுவும் பிரச்சனை இல்லை என எழுதி கொடுங்கள் என கேட்டார்கள்.
காளி சொன்னான். “நாங்கள்தான் பிரச்சனை இல்லை என்று சொல்கிறோமே. எழுதி தாருங்கள் என்றால் என்ன சார் அர்த்தம்” என்றான்.
தாத்தாவுக்கு கோபம் வந்தது. “சார் நாங்களே நொந்து போய் இருக்கோம். எங்களை தொந்தரவு பண்ணாதீங்க” என சத்தம் போட்டார். தாத்தா சத்தம்போட்ட பிறகே அந்த தொந்தரவு குறைந்தது.
சி.ஐ.டி. போலீஸ் வந்தார். காளி உன்னை பத்தி விசாரித்து பார்த்தோம். உம் மேலே தப்பே இல்லை. அந்த பைய தான் காசு வாங்கிட்டு கேஸை வாபஸ் வாங்கியிருக்கான். உன் மேலே பொய் புகார் சொன்னதோட மட்டுமில்லாமல் உன் பெண்டாட்டியை தாக்கியிருக்கான். ஊருல இப்போ உன் மேலே தான் எல்லோரும் தப்பா நினைக்கிறாங்க. அதனால நீ புகார் கொடு. அது தான் உனக்கு நல்லது. மக்களும் புரிஞ்சுகிடுவாங்க. மாரியப்பனும் பயப்டுவான்”, என்றார்.
“சார். உப்பு தின்னவன் நிச்சயம் தண்ணீ கொடுப்பான். நான் தாமிரபரணிக்காக வாழணுமுன்னு நினைக்கேன். என் மனைவியும் அப்படித்தான். இவனை கேஸ் கொடுத்து, இவனை தண்டனை வாங்கி தர கோர்ட் கேஸ்சுன்னு ஏறி இறங்க நான் தயாரா இல்லை. சாரி சார். எங்களை புரிஞ்சிகிட்டதற்கு மிக்க நன்றி”.
சி.ஐ.டி போலீஸ் அவனை ஒரு தெய்வப்பிறவியாக நினைத்தார். கையை தூக்கி அவனை கும்பிட்டார்.
“காளி. நான் காந்தியை நேருல பாக்கல. இப்போ நேரில பாக்கேன்”. அமைதியாக அங்கிருந்து கிளம்பினார் சி.ஐ.டி. போலீஸ்.
அன்று இரவு 8 மணி இட்லி வாங்கி கொடுத்த அவளுக்கு மருந்து கொடுத்து தூங்க வைத்துக் கொண்டிருந்தான் காளி .
செல்வி கேட்டாள். “என்னங்க. எனக்கு என்னாச்சு”.
“ஒண்ணுமல்லை. நீ குணமாகிட்டே”.
“இல்லைங்க என் வயித்தில ஏதோ பாரம் குறைஞ்ச மாதிரி இருக்குங்க”.
“ம்.அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை செல்வி”.
“இல்லைங்க. எனக்கு தெரியும். நானும் தாமிரபரணி மாதிரி மலடி ஆகிட்டேன்”.
கதறினாள் செல்வி. அவளை அணைத்த படி ஆறுதல் சொன்னான் காளி. ஆனால் அவளை தேற்ற முடியவில்லை.
( நதி தொடர்ந்து பயணிக்கும்)


