விட்டிலாபுரம் கோவில்பத்து கிராமத்தில் பண்ணை பள்ளி நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நெல் பண்ணைபள்ளி நிகழ்ச்சி விட்டிலாபுரம் கோவில்பத்து கிராமத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமை வகித்தார். பண்ணைபள்ளி நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் நாகராஜன் திருந்திய நெல் சாகுபடி முக்கியத்துவம், நிலம் தயாரித்தல், விதைகள் நேர்த்தி செய்வதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார்.
கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் மண் மாதிரி சேகரிக்கும் முறை, மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம், தரமான விதை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம் ஆகிய குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார்.
மேலும் அட்மா திட்ட மேலாளர்கள் ராஜலட்சுமி, மகேஸ்வரி, முத்து சங்கரி ஆகியோர் உயிர் உரங்கள் மூலம் விதை நேர்த்தி செய்யும் முறை, தரமான விதை, தேர்ந்தெடுக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். உதவி வேளாண்மை அலுவலர் ரகுநாத் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் விட்டிலாபுரம் கோவில்பத்து பஞ்சாயத்து செயலர் ராமலட்சுமி, டிவிஎஸ் தொண்டு நிறுவன அலுவலர் செல்வராணி, பணித்தள பொறுப்பாளர் பேச்சியம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியில் விட்டிலாபுரம் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த 25 விவசாயிகள் கலந்து கொண்டனர்.


